பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

84


இனாம்தார் என்று வெள்ளையருக்கு விசுவாசம் தெரிவிக்க எராளமான சிற்றரசுகள் இருந்தன. தலைநகரம் சென்னை மாநகரந்தான்.

1909-ஆம் ஆண்டு மிண்டோ-மார்லி சீர்திருத்தத்தின் விளைவாய் இந்தியர்களையும் உயர் உத்தியோகங்களில் ஆங்கிலேயர் நியமித்தனர். தென்னகத்தில் இவை அத்தனையும் பார்ப்பனர்களுக்கே கிடைத்து வந்தன. எடுத்துக்காட்டாக 1898 முதல் 1930 வரை நியமிக்கப்பெற்ற ஹைகோர்ட் ஜட்ஜ்கள் ஒன்பது இந்தியரில், எண்மர் பார்ப்பனர், ஒருவர் நாயர். உதவி கலெக்டர் 140 பேரில் 77 பேர் பார்ப்பனர். 128 மாவட்ட நீதிபதிகளில் 93 பேர் பார்ப்பனர்கள்.

1916-ல் இதனால் வெகுண்டெழுந்த டாக்டர் டி.எம். நாயர், சர்.பி.தியாகராயர் இருவரும் சென்னையில் தென்னிந்திய நல உரிமைச்சங்கம் எனும் நீதிக் கட்சியைத் துவக்கினர். பனகல் அரசர் ராமராய நிங்கவார், டாக்டர் நடேச முதலியார் ஆகியோர் ஒத்துழைத்தனர். அப்போது காங்கிரஸ் மாயை மூடுபனிபோல் கவிந்திருந்ததால் தமிழினத் தலைவர்கள் பலர் அந்த முகாமில்தான் இருந்தனர்!

1919-ல் நிகழ்ந்த மாண்டெகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் அடிப்படையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் நீதிக்கட்சி 1920-ஆம் ஆண்டிலும் 1923-ஆம் ஆண்டிலும் பெருவெற்றி பெற்று மந்திரி சபைகளை அமைத்தது. நீதிக்கட்சியின் வெற்றியில் பொறாமை கொண்ட பார்ப்பனர், சுயராஜ்யக் கட்சி அமைத்து, 1926-ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டனர். நீதிக்கட்சிக்கும், சுயராஜ்யக் கட்சிக்குமே பெரும்பான்மை கிட்டவில்லை அப்போது!

பார்ப்பனரல்லாதார் ஆட்சி நடத்துவதைப் பார்ப்பனர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்ற அப்பட்டமான உண்மையினை அப்போதுதான் ஈ.வெ.ரா முதன் முறையாக உணர்ந்தார். அதற்கேற்ப, நாட்டிலிருந்த செய்தி ஏடுகளெல்லாம் பார்ப்பன ஆதரவு ஏடுகளாகவே இருந்து வந்தன. காங்கிரஸ் இயக்கத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்ட அத்தகைய, ஏடுகளும், ஈ.வெ. ராமசாமியின் வைக்கம் போராட்டம், ஈரோடு மறியல் போன்ற வரலாறு படைத்த செய்திகளைக்கூட இருட்டடிப்புச் செய்தன; ஈ.வெ. ராமசாமிக்குப் பெருமை சேரக்கூடாதென்ற உள்நோக்கத்தால்! நீதிக் கட்சியினரால் நடத்தப்பட்டு வந்த தமிழ் ஏடு “திராவிடன்” ஆங்கில ஏடு “ஜஸ்டிஸ்” ஆகியவற்றுக்கும் போதிய செல்வாக்கில்லை. ஆகையால் தாமே ஒரு பத்திரிகை துவங்கிட ஈ.வெ.ரா துணிவு கொண்டார்.