பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



1925-ஆம் ஆண்டு மே திங்கள் 2-ஆம் நாள் ஈரோட்டில் உண்மைவிளக்கம் பிரசில் அச்சாகிக் “குடி அரசு” என்னும் வார இதழ், திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகளால் தொடங்கி வைக்கப்பெற்றது. நாட்டிலுள்ள உயர்வு தாழ்வு மனப்பான்மை ஒழிந்து, சமத்துவ உணர்வு பரவி, சமயத் துறையிலுள்ள கேடுகள் ஒழிய, நாயக்கரின் “குடி அரசு” பாடுபட்டால் தனக்கு மிக்க மகிழ்ச்சி என அந்தத் தமிழ்த் துறவி பேசினார். மனச்சாட்சிக்கு உண்மை என்று பட்டதைத் தெரிவிக்க அஞ்சக்கூடாது; மக்களுக்குள் சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஓங்கி வளர வேண்டும்; உயர்வு தாழ்வு உணர்ச்சி நாட்டிலுள்ள சாதிச்சண்டைக்குக் காரணமாயிருத்தலால் அது ஒழிக்கப்பட வேண்டும்; தேசத்தையே முன்னிறுத்தி வைக்காமல், ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும் - என்று தமது புதிய ஏட்டின் நோக்கத்தை அன்றே வெளியிட்டார் ஈ.வெ.ரா. பச்சை மேலட்டையுடன் கூடிய “குடி அரசு” வார ஏடு, அன்றைய ஆதிக்கக் கோட்டையினைத் தகர்த்திடும் வெடிகுண்டாகக் கருதப்பட்டது. தமிழ் மக்கள் இதனைத் தம் கைக்குழந்தை போல் சீராட்டி வளர்க்கத் தலைப்பட்டனர்.

தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக ஈ.வெ.ரா சில ஆண்டுகள் வீற்றிருந்தார். பின்னர், டாக்டர் வரதராஜலு நாயுடு தலைவராகவும் ஈ.வெ.ரா. காரியதரிசியாகவும் பணியாற்றினர். சென்னையிலிருந்த காங்கிரஸ் கமிட்டியை ஈரோட்டில் தம் வீட்டுக்கே மாற்றிக் கொண்டார். அப்போது நிகழ்ந்த ஒரு சம்பவமே தமிழகத்து அரசியலில் மாபெரும் புரட்சிகரமான திருப்பத்துக்கு அடிகோலியது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவியில் தமிழ்நாட்டுக் குருகுலம் என்ற பெயரால் சிறுவர்களுக்கான விடுதி ஒன்றினை வ. வே. சுப்பிரமணிய அய்யர் பொறுப்பேற்று நடத்தி வந்தார். இது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொருளுதவியில் நடந்தது. கட்சியிலிருந்து பணம் அவ்வப்போது தரப்பட்டு வந்தது. மேலும் தமிழ்நாட்டு வள்ளல் பெருமக்களிடமிருந்து ஈ.வெ.ரா., திரு.வி.க., டாக்டர் நாயுடு போன்றோர் நிறையப் பொருள் திரட்டி வழங்கி வந்தனர். மெத்தப் படித்த தேசியவாதியான வ.வே.சு. அய்யர் குருகுலத்து மாணவர்களிடையே வேற்றுமையை விளைத்து வந்தார். பார்ப்பனப் பிள்ளைகளுக்குத் தனி இடம், தனித் தண்ணீர், தனி உணவு, (உப்புமா) தனிப்பயிற்சி; பார்ப்பனரல்லாத சிறார்களுக்கு வேறு இடம், வேறு உணவு, (பழைய சோறு) வேறு தண்ணீர், வேறான பயிற்சி; இதனால் அங்கே சாதிப் பிரிவினை ஆக்கம் பெற்று வந்தது. குருகுலத்தின் நோக்கத்துக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் இது முரணானது எனப் பலமுறை எடுத்துக்காட்டியும், வ.வே.சு. அய்யர் ஒருப்படவில்லை; காங்கிரஸ் கட்சியின் உதவிப் பணத்தை ஈ.வெ.ரா. தரச்சம்மதிக்காத