பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

86


போது, வேறொரு பார்ப்பனக் காரியதரிசி (டி.எஸ்.எஸ். ராஜன்) வாயிலாய், அய்யர் அந்தத் தொகையைப் பெற்றுக் கொண்டார்!

பின்னாளில், 1948-ல் சென்னை மாகாண முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியாரின் மகன் சேர்மாதேவி குருகுலத்தில் பயிலும்போது, பார்ப்பனர் தண்ணீர்ப் பானையில் நீர் எடுத்துக் குடித்து, அவ்வாறு சாதிப் பிரிவால் பாதிக்கப்பட்டவர். இவரை அழைத்து வந்து ரெட்டியார், பெரியார்முன் நிற்க வைத்து, ‘அங்கு நடைபெறும் அட்டூழியங்களை நாயினாவிடம் செப்பு’ என்றாராம்.

பச்சைப் பார்ப்பனியம் தலை விரித்தாடும் போக்கினைக் கண்டித்து ஈ.வெ.ரா. வெளிப்படையாகப் போர் தொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு உந்தப்பட்டார். காங்கிரசில் இருந்த பார்ப்பனரல்லாத தலைவர்களான திரு.வி.க., டாக்டர் நாயுடு, எஸ். ராமநாதன், தண்டபாணிப் பிள்ளை, வயி.சு. சண்முகம் செட்டியார், ஓமந்தூர் ரெட்டியார், தங்கப் பெருமாள் பிள்ளை ஆகியோர் இந்தக் குருகுலத்தையே ஒழித்துவிட முடிவெடுத்தனர். அய்யர் இணங்கவில்லை. காந்தியடிகளிடம் தலையிடுமாறு கேட்டனர். அவரும் குருகுலத்தில் சமபந்தி உணவே அளிக்கப்படல் வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கும் வ.வே.சு. அய்யர் மறுத்து விட்டார்.

ஈ.வெ. ராமசாமியின் கோட்பாட்டுக்கு இப்போது ஒரு புதிய பொருள் கிடைத்தது. பார்ப்பனர் பேசுகின்ற தேசியம் போலி; தீண்டாமை ஒழிப்பு மாய்மாலம்; ஒற்றுமை ஒருமைப்பாடு கொள்கை யாவும் ஏமாற்று வேலை - என்று தமிழ் நாடு முழுவதும் பறையறைந்தார். காங்கிரசில் இருந்தபோது பிரச்சாரத்துக்காக திண்டுக்கல்லில் ஒரு பார்ப்பனர் வீட்டில் உணவு கொள்ளச் சென்றபோது, எஸ். சீனிவாச அய்யங்காருக்கு உள்ளேயும், இவருக்கு வெளியேயும் சாப்பாடு படைத்தனர். காலையில் சாப்பிட்டுவிட்டுத் தாம் விட்டுச் சென்ற எச்சில் இலைக்குப் பக்கத்திலேயே, அமர்ந்து மதியமும், இரவும் ஈ.வெ.ரா. உணவு அருந்த நேரிட்டது.

சாதி வேற்றுமை வளர்த்த குருகுலத்துக்கு நிதி திரட்டி வழங்குவதை அறவே நிறுத்திக் கொண்டதால், அது இயங்குவது இயலாமற்போய்த், தானே மரணத்தைத் தழுவியது. தமிழ் மக்களின் அகக் கண்களைத் திறக்க இந்தக் குருகுலப் போராட்டம் அருமையாக உதவியது. காங்கிரஸ் காரியக் கமிட்டியிலிருந்த பார்ப்பனர்களான சி. ராசகோபாலாச்சாரியார், என்.எஸ். வரதாச்சாரியார், கிருஷ்ணமாச்சாரி, ஆலாசியம், கே. சந்தானம், டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் (இவர் ராஜாஜி அமைச்சரவையில் சுகாதார மந்திரியாக இருந்தபோது, 2000 மூட்டை நெல்லைப் பதுக்கி வைத்திருந்தாராம் 1937-39-ல்) மற்றும் டாக்டர் சாமிநாத சாஸ்திரி ஆகியோர், தமிழ்நாடு காங்கிரஸ்