பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


தலைவர்கள் பார்ப்பன துவேஷப் பிரச்சாரம் செய்வதாய்ப் பழி கூறிக் கமிட்டியைவிட்டு விலகிச் சென்றனர். இவர்களை “இந்து” கஸ்தூரி ரங்க அய்யங்காரும், “சுதேசமித்திரன்” ரெங்கசாமி அய்யங்காரும், எஸ். சீனிவாச அய்யங்காரும், எஸ். சத்தியமூர்த்தி அய்யரும் பச்சையாக ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு நிகழ்ச்சியிலும் பார்ப்பனத் தலைவர்கள் தமது தனித்த நிலையினை வெளிப்படுத்தி, வெறுப்பினைத் தேடினார்கள். பனகல் அரசர் முதலமைச்சராயிருந்தபோது 1924-ஆம் ஆண்டில் இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்தார். இதனால் கோவில் மடாலயச் சொத்துகள்மீது கட்டுப்பாடும் ஒழுங்கு முறையும் புகுத்தப்பட்டது. சுரண்டல் பெருச்சாளிகளுக்கு இது தீமையாகத் தென்பட்டது. எனவே பார்ப்பன வழக்கறிஞர்கள், காங்கிரஸ்காரர்கள் ஆகியோர் மடாதிபதிகள், கோயில் அறங்காவலர் இவர்களின் பின்னணியிலிருந்து தூண்டிவிட்டு, மதத்தில் அரசு தலையிடுகிறது; இது தவறு என எதிர்ப்புக் காட்டினர். காங்கிரசில் இருந்துகொண்டே ஈ.வெ.ரா., தமது நண்பர்களின் துணையோடு, நீதிக் கட்சியின் அந்த நேர்மையான சட்டத்தை வரவேற்றார். அறநிலையங்களுக்கு ஆபத்தில்லை; கோயில் சொத்துகள் கொள்ளை போகாமல் தடுக்கலாம்; கள்வர்களுக்குதான் ஆபத்து என அறிக்கை விடுத்தார் ஈ.வெ. ராமசாமி!

அனைத்துக்கும் சிகரமாய், மகுடம் வைத்தாற்போல் அமைந்தது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்! பார்ப்பனர் ஆதிக்கத்தைத் தவிர்ப்பதற்காகப் பார்ப்பனரல்லாதாருக்கு அரசுப் பணிகளில் தக்க பாதுகாப்பளிக்க வேண்டும்; வகுப்பு எண்ணிக்கைக்கு ஏற்ற வீதாச்சாரத்தில் உத்தியோகங்களை வழங்கிட வேண்டும். இவைதாம் நீதிக்கட்சி தோன்றியதற்கான மூல காரணங்கள். ஈ.வெ.ரா இதிலுள்ள நியாயத்தை உணர்ந்திருந்ததால் துவக்க முதலே இக்கொள்கையை ஆதரித்து வந்தார். நீதிக்கட்சி இக்கொள்கை கொண்டிருப்பதால்தானே வலுவடைகிறது; அவன் வலிமையைக் குறைக்க வேண்டுமானால் நாமே காங்கிரசில் வகுப்புவாரி உரிமைக் கொள்கையினை ஏற்றுக் கொள்ள வேண்டும் - என ஈ.வெ.ரா. வாதாடிப் போராடி வந்தார்.

1920-ம் ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரஸ் மாகாண மாநாட்டில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானம் கொணர்ந்து, பெரும்பான்மை பெற்று நிறைவேற்றியும், தலைவர் எஸ். சீனிவாச அய்யங்கார் அனுமதிக்க மறுத்துவிட்டார்.

1921-ல் தஞ்சாவூர் மாகாண மாநாட்டில் - இதைக் கொள்கையாக வைத்துக் கொள்ளலாம்; தீர்மான வடிவம் வேண்டாம் என்று தலைவர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் தந்திரமாகத் தடுத்து விட்டார்.