பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

தந்தை பெரியார்



38. தந்தை பெரியார் அமரர் ஆனார்

"நான் சாதாரணமானவன்; என் மனதில் பட்டதை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இதுதான் உறுதி, இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை; ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்; மற்றதைத் தள்ளிவிடுங்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என் மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத் தன்மை பொருங்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால், மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள்.

- "நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள்; நான் சொல்லுவது வேதவாக்கு; நம்பாவிட்டால் நரகம் வரும்; நாத்திகர்கள் ஆகி விடுவீர்கள் - "

என்று - வேதம், சாத்திரம், புராணம் கூறுவது போலக் கூறி, நான் உங்களை அடக்கு முறைக்கு ஆளாக்கவில்லை. நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி, அனுபவம் இவைகளுக்கு ஒத்து வராவிட்டால் தள்ளி விடுங்கள்."

"ஒருவனுடைய எங்தக் கருத்தையும் மறுப்பதற்கு, யாருக்கும் உரிமை உண்டு; ஆனால், அதனை வெளியிடக் கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது."

- தந்தை பெரியார்

(கு. 13.4.30; 12:2)

அண்ணாவின் ஆட்சியை அனைத்துத் தமிழக மக்களும் திறந்த மனத்துடன் வரவேற்றனார்.

எங்கும் தமிழ் - எதிலும் தமிழ் என்று தமிழ் மொழி தலை நிமிர்ந்து நின்றது.