பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தந்தை பெரியார்



பிள்ளை தறுதலையாக வளர்ந்து வருகிற விஷயம், வெங்கடப்ப நாயக்கருக்குத் தெரிய வந்தது.

இப்படியே போனால், பிறகு தன் மகனைத் திருத்தவே முடியாது என்பதை உணர்ந்தார்.

உடனே, பாட்டியாரிடமிருந்த இராமசாமியைத் தன் வீட்டோடு அழைத்து வந்து விட்டார்.

இது இராமசாமிக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது.

அப்பாவும் அம்மாவும் மிகவும் நல்லவர்கள்தான் - தன்னிடம் மிகவும் ஆசையாகவும் அன்பாகவும் இருப்பார்கள். ஆனால் -

மிகவும் கண்டிப்பானவர்கள் -

நேர்மையாகவும், ஒழுங்காகவும் வாழ வேண்டும் என்று விரும்புவார்கள் எல்லாவற்றிற்கும் மேல், நிதம் காலையில் குளிக்கச் சொல்லுவார்கள்.

பாட்டி வீட்டில் சுதந்திரமாக வாழ்ந்தது போல இஷ்டத்திற்கு ஊர் சுற்றித் திரிவதும், பள்ளிக்குச் செல்லாமல் பாட்டியை ஏமாற்றுவது போல் இங்கு நடவாது.

இதையெல்லாம் எண்ணிப் பார்த்த இராமசாமிக்குத் துக்கம் பெருஉருண்டையாகத் தொண்டையை அடைத்தது.

அன்று இரவெல்லாம் இராமசாமிக்கு உறக்கமே வரவில்லை.