பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேசும் மொழியே உண்மையான அறிகுறி எனலாம். சமுதாய வாழ்வுக்கு அறிகுறியாகவுள்ள மொழியே, அந்தச் சமுதாய வளர்ச்சிக்கும் காரணமாக உள்ளது. சமுதாயத்தால் வளர்ந்து சமுதாயத்தை வளர்த்து வருவது மொழி எனலாம் என்று ஜே. வென்றிஸ் என்ற மொழியியல் அறிஞர் மொழிவர்.

மனிதனது மனத்தை விடுத்து ஆராய்ந்தால், மொழியைப்பற்றி அறியத்தக்கதாக ஒன்றும் இல்லை. மொழியை வளர்த்தது மனமே; மனத்தின் இயல்பைக் காட்ட வல்லதாக, மனத்தின் எதிரொளியாக (பிரதிபலிப்பாக-Reflection) உள்ளது மொழியே. மனிதரின் தொடர்பு இல்லாமல் தனியே வளர்ந்து வாழவல்லது என மொழியைப்பற்றிக் கருதுதல் பொருந்தாது. பேசும் மக்களை விட்டுத் தனியே மொழி என்பது இல்லை. மனிதரின் ஒவ்வொருவரின் ஆழத்திலும் மொழி வேர் கொண்டுள்ளது; அங்கிருந்தே மொழி வளர்ச்சி பெற்று விளங்குகிறது.

பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; ஆயினும் எழுதப்படுவதும் படிக்கப்பெறுவதும் அடுத்த நிலையில் வைத்துக்கருதப்பெறும் மொழியாகும். இவையேயன்றி வேறுவகை மொழிநிலைகளும் உண்டு. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவுகாணப்படுவது ஆகியவைகளும் மொழியேயாகும்.

பொருள்களை மட்டிலும் அறியும் அறிவு ஊமைக்கு உள்ளது; மொழிவளர்ச்சி இல்லாமையால் மேலும் அறிவை வளர்க்க வாய்ப்பு அவனுக்கு இல்லை. நாகரிகம் தொடங்கும் முன்பு, மக்களுக்குப் புலன்கள் வளர்ந்திருந்தன; இயற்கையும் வளம் மிக்குக் காத்து வந்தது; ஆயின் அக்காலத்து மக்கள் அறிவு வளர்ச்சி பெறவில்லை. பேசக் கற்றுச் சொற்களைப் படைத்துக் கொண்டபிறகே அறிவுவளரத் தொடங்கியது. பேச்சுடன் நிற்காமல் எழுத்துமுறை கற்றுச் சொற்களை மிகப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகே அறிவு விரைவாக வளரத் தொடங்கிற்று.

பேச்சுமொழி உள்ளத்து உணர்ச்சியின் தூண்டுதலால் இயல்பாகத் தானே வளரும் மொழி. எழுத்து மொழி. அறிவின் முயற்சியால் ஒழுங்கு செய்து அமைக்கப்பெறும் மொழி. முன்னது, மழைநீர் திரண்டு வரும் வெள்ளம் போன்றது. பின்னது, அணைகட்டித்தேக்கிய நீர் வாய்க்கால்களில் வருவது போன்றது. ஆதலால் எழுத்து மொழியில் எழுவாய், பயனிலை செயப்படுபொருள் முதலியன அமைவதில் ஒழுங்குமுறை காணப்பெறுகின்றது. பேச்சுமொழியிலோ உணர்ச்சிவசமாய்ப் பேசுவோரின் உள்ளத்தில் எது முதலில் தோன்றகிறதோ, அதற்கு உரிய சொல்லே முதலில் வெளிப்படுகிறது. ஆகவே பேச்சு