பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

தந்தை பெரியார் சிந்தனைகள்


விநாயகர், முருகன், சிவபெருமான், திருமால், துர்க்கை முதலிய எண்ணற்ற தெய்வங்களை நினைந்து கடவுள் உண்டு என்கிறார்கள். நீங்கள் அவர்கள் எழுவாயாகக் கொண்டுள்ள அனைத்து தெய்வங்களையும் ஒன்றாகக் கட்டி, உங்கள் பக்கம் இழுத்து அதையே எழுவாயாகக் கொண்டு ‘இல்லை’ என்கிறீர்கள் என்றேன். ‘ஆமாம், ஆமாம்; அதுதான், அதுதான்’ என்று சொல்லி, ‘ஒன்றையும் நினையாமல் ஏதோ சொல்லிக் கொண்டு வந்தேன். நீங்கள் சிந்தித்துப் பேசுகிறீர்கள். உங்கள் சிந்தனை வளர்க’ என்று வாழ்த்தினார். அந்த வாழ்த்துதான் இன்றளவும் என்னைச் சிந்திக்கத் தூண்டுகின்றது.


(இ) பெரியார் தொடர்பு அதிகம் இருந்ததால் உள்ளூர்ப் பொதுமக்களில் சிலர் மாவட்டக்கல்வி அதிகாரிக்கு “தலைமையாசிரியர் நாத்திகர்; ‘கடவுள் இல்லை’ என்று மாணாக்கர்களிடம் பிரச்சாரம் செய்கின்றார். இவர் பொறுப்பில் பள்ளி இருந்தால் மாணாக்கர்கள் நாத்திகராவார்கள். இவரை உடனே நீக்க வழிவகைகள் செய்யவேண்டும்’ என்று ‘அநாமதேயக் கடிதங்கள்’ அனுப்ப, அவை சமாதானம் கேட்டு எனக்கு வந்தன. இஃது உள்ளூர் காங்கிஸ்காரர்களின் ‘திருவிளையாடல்’ என்ற கிசுகிசுப்பு மூலம் அறியமுடிந்தது.


அப்போது துறையூர் காங்கிரசுத்தலைவர் திரு சுவாமிநாத உடையார். அவர் சிறந்த உத்தமர். அதிகம் படிக்காதவராயினும் உயர்ந்த பண்பாட்டாளர். அவரை நன்கு அறிவேன். அவரிடம் செய்தியைச் சொல்லி நிலையை விளக்கினேன். அவர் கூறியது: “ஹெட்மாஸ்டர், நீங்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்லர் என்பதை ஊரே அறியும். எல்லாக் கட்சியிலும் உள்ள நல்லவர்களிடம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பதை அறிவேன். மாணாக்கர்களும் ஊரில் பெரியவர்களும் உங்களிடம் நல்ல மதிப்பு வைத்துக் கொண்டிருப்பவர்கள்; உங்களைப் பற்றி மக்கள் பெருமையாகப் பேசுவதையும் அறிவேன்” என்று ஆறுதல் கூறினார். விரைவில் கட்சியில் உள்ள சில்லறைப் பேர்வழிகளை அடக்கிவிட்டார். கல்வித்துறைக்கும் சமாதானம் எழுதி விட்டேன். இந்தப்பிரச்சினை பின்னர் தலைதுாக்கவில்லை. நிற்க.


இனி தந்தை பெரியாரின் கடவுள் சமயம் பற்றிய சிந்தனைகளில் கவனம் செலுத்துவோம். பெரியார் கருத்துப்படி நம் நாட்டிற்கு அவசியமாக வேண்டியவை மூன்று அவை (1) மூடநம்பிக்கை ஒழிய வேண்டும்; (2) அறிவுக்குச் சுதந்திரமும் விடுதலையும் ஏற்பட்டு அது வளர்ச்சிபெற வேண்டும்; (3) சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட வேண்டும். என்பவையாகும்.