பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தந்தை பெரியார் சிந்தனைகள்


முட்டாள்களால் உண்டாக்கப் பெற்றிருந்தால் காரணகாரியம் இருக்காது. இதனால் அது-கடவுள்-முட்டாள்களின் கண்டுபிடிப்பு என்கின்றார்.

(13) மனிதன் சிந்திக்கிற தன்மையற்றிருந்த காலத்தில் இயற்கை யில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு அவை தோன்றியதற்குக் காரணம் தெரியாது பயந்தவன் இவற்றிற்கு ஒரு காரணம் வேண்டுமென்று நினைத்து முட்டாள்தனமாகக் கற்பித்ததே கடவுள் என்பது பெரியாரின் கருத்து.

(14) கடவுள் வேதம் பிரார்த்தனை முதலியவற்றின் பலன் என்கின்ற உணர்வைக் கடவுள் மதவாதிகள், பார்ப்பனர்கள் மக்களுக்கு ஏற்றாதிருந்தால் நாட்டில் கடவுளர்களே தோற்றுவிக்கப்பெற்றிருக்க மாட்டார்கள் என்று உறுதியாக உரைக்கின்றார் உத்தமர் பெரியார்.

(15) கடவுளைக் கற்பித்தவர்களும் உலகில் உள்ள எல்லாப் பொருள்களிலும் கடவுள் பெரியவர்[குறிப்பு 1] என்று சொல்லிக் கற்பித்தார்களேயொழிய மனிதத் தன்மைக்கு மேல் கடவுளிடம் என்ன பெருந்தன்மை உள்ளது என்று எதையும் எவரும் மெய்ப்பித்துக் காட்டவே இல்லை என்பது பெரியாரின் கருத்து.

(16) பண்டைக் காலத்தில் தோற்றுவிக்கப் பெற்ற மனிதனும் கடவுளும் அன்றைய பாதுகாப்பிற்குப் போதுமானதாய் இருந்தன. அந்தக் காலத்திய பாதுகாப்பிற்கு இன்று எவரும் பயப்படுவதில்லை. அந்தக் காலத்தில் ஓர் ஐந்து ரூபாய்த்தாளை வைத்து அதன் மீது ஒரு பளுவையும் வைத்து நாலு பக்கங்களிலும் ஏசுநாதர், முகமது நபிநாயகம், சிவன், திருமால் என்று எழுதி விட்டுப் போய்விட்டால் ஒருவன்கூட அதை எடுக்கத் துணிய மாட்டான். இந்தக்காலத்தில் அதனை ஒருவன் கூட எடுக்காமல் இருக்கமாட்டான். பெரியாரின் அற்புத எடுத்துக்காட்டு இது !

நம்பிக்கை: கடவுள் நம்பிக்கைப்பற்றிப் பெரியார் சிந்தனைகளில் சிலவற்றைக் காண்போம். பொதுவாக, கடவுள் நம்பிக்கை தவறான வழிகளில் மக்களைக் கொண்டு செலுத்துவதாகக் கருதுகின்றார்.

(1) கையாலாகாதவனுக்குக் கடவுள் துணை; அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் செயல்; இவற்றை உணர முடியாதவனுக்குத் தலைவிதி; இப்பேச்சு ஓர் இலக்கண விதிபோல் அமைந்துள்ளது.


  1. அத்வைதம் கூறும் பிரம்மம்; தாயுமானவர் அதை மொழி பெயர்த்துக் கூறுவர் பெரிய பொருள் என்று.