பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடவுள் சமயம்பற்றிய சிந்தனைகள்

35


கோயில்கள்: உருவ வழிபாட்டின் விளைவாக எழுந்தவை திருக்கோயில்கள். மராமத்து செலவு அடிக்கடி ஏற்படும், எதிர் காலத்தில் இதனை எவரும் ஏற்காமாட்டார்களோ என்று எண்ணியே கல்லாலேயே கோயில்களைக் கட்டியுள்ளனர்.

(1) இந்நாட்டில் எத்தனைக் கோயில்கள்? வைணவர்களுக்கு 108 திவ்விய தேசங்கள். யாவும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்றவை; மங்களாசாசனம் செய்யப்பெறாத கோயில்கள் ஆயிரக்கணக்கானவை. சைவர்கட்குப் பாடல் பெற்ற தலங்கள் 274; வைப்புத்தலங்கள்-பாடல்களில் பெயர்கள் வைக்கப் பெற்றவை 233. இந்த இரண்டிலும் அடங்காதவை எண்ணற்றவை. பிள்ளையார் கோவில்கள் எத்தனை? ஆற்றங்கரை, அரச மரத்துப்பிள்ளையார்கள் எத்தனை? சாலையோரங்களில் நாடோறும் தோன்றி வரும் கோயில்கட்குக் கணக்கே இல்லை. இது பக்தி பெருகி வருவதற்கு அடையாளமா? என்று கேட்கின்றார் பெரியார்.

(2) மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில், காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில், இராமேசுவரத்திலுள்ள இராமநாதர் கோயில்- இவை ஒவ்வொனறும் நாடாளுமன்ற கட்டடத்தைவிட முப்பது, நாற்பது இலட்சம் அதிகம் போட்டாலும் கட்ட முடியாது. இவை ஒவ்வொன்றிலும் உள்ள சாமிகளோ நாடாளுமன்ற உறுப்பினர்களைவிட ஏன்? வாக்களார்களைவிட எத்தனையோ மடங்கு அதிகமாக உள்ளன. அந்தச் சாமிகளுக்கு ஆகின்ற செலவோ நாடாளுமன்ற உறுப்பினர்கட்குக் கொட்டி அழுகின்ற தெண்டச் செலவைவிட ஏராளமாக ஆகின்றது-என்று மனவருத்தத்துடன் பேசுகின்றார்கள் அய்யா அவர்கள்.

(3) நம் நாட்டைப் பிடித்துள்ள பெருங்கோயில்கள்தாம் நாம் கெட்டு சீரழிந்து அடிமையானதற்கு, வறுமையில் கஷ்டப்பட்டுத் திண்டாடுவதற்கு எல்லாம் காரணம் என்பது அய்யா அவர்களின் கருத்தாகும். இவற்றை நம் வாழ்வைக் கெடுத்த சனியன்களே என்று வயிறெரிந்து பேசுகிறார்கள். கொள்ளையடித்த பணத்திற்குப் பரிகாரம் இதுதான் என்று நம்பியே பணக்காரர்கள் கோயில்களைக் கட்டுகிறார்கள். தவறாகத் திரட்டிய பணத்தின் ஒரு பகுதியை, தாமே அச்சடித்த 100 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகளைக் கட்டுக்கட்டாக திருப்பதி போன்ற திருக்கோயில்களின் உண்டியில் கொட்டுகிறார்கள். அவை நல்ல நோட்டுகளுடன் கலந்து புழக்கத்திற்கு வந்து விடுகின்றன. கல்லுச்சாமிகளைத் தம் தகாத செயல்களுக்குப் பங்காளிகளாக்கி விடுகிறார்கள். பண்ட உற்பத்திக்குமேல் பண உற்பத்தி பெருகி