உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தனித் தமிழ்க் கிளர்ச்சி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்

9


அன்று விருத்தாம்பிகை அம்மையாரைப் புதுச்சேரியில் திருமணம் செய்துகொண்டார். 1946- ஆம் ஆண்டு மயிலம் கல்லூரிப் பணியை விடுத்துப் புதுச்சேரி வந்தார். 1947 ஆம் ஆண்டு அவருடைய வாழ்க்கையில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டது. தன்னுடைய சட்டகர் புரவலர் சிங்கார குமரேசனார் உதவியுடன் பைந்தமிழ்ப் பதிப்பகம் என்னும் நூல் வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கித் தன்னுடைய முதல் நூலான வீடும் விளக்கும் என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இந்த நூலுக்கு மதிப்புரை வழங்கியவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் அ. சிதம்பரநாதச் செட்டியார் ஆவார்கள். 1947- ஆம் ஆண்டு ஏற்றப்பட்ட அந்த எழுத்து விளக்கு 1997- ஆம் ஆண்டுவரை ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து எரிந்துகொண்டு இருந்தது.

1947-48 ஆம் ஆண்டுகளில் திருக்குறள் தெளிவு, தெவிட்டாத திருக்குறள் என்னும் மாதமிருமுறை இதழ்களை நடத்தித் தமிழகம் முழுவதும் அறிமுகம் ஆனார். 1948ஆம் ஆண்டு பாவேந்தரால் மதிப்புரை வழங்கப்பட்ட தனித்தமிழ்க்கிளர்ச்சி என்னும் அம்மானை நூலை எழுதி வெளியிட்டார். 1949 - ஆம் ஆண்டுமுதல் 1958 - ஆம் ஆண்டுவரை புதுச்சேரி பெத்திசெமினார் பள்ளியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். இடையில் 1952-ஆம் ஆண்டுவாக்கில் சென்னை, சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் தேர்ந்தார். 1958 - ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை புதுச்சேரி அரசினர் ஆசிரியர் பயிற்சி மையத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி நூற்றுக்கணக்கான ஆசிரியர்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார். இவர் உருவாக்கிய ஆசிரிய மாணாக்கர்கள் மூலம் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.