பக்கம்:தனித் தமிழ்க் கிளர்ச்சி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

தனித்தமிழ்க் கிளர்ச்சி


ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றிய போது "திருவள்ளுவர் தமிழ்ப் பல்கலைக்கழகம்" எனும் அமைப்பைத் தொடங்கி யாப்பதிகார வகுப்பும் திருக்குறள் வகுப்பும் நடத்தினார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றனர். பலருக்குப் பாவலர் பட்டம் வழங்கினார்.


மயிலத்திலிருந்து புதுச்சேரிக்கு வந்த இவரைப் பல புதுச்சேரி பெருமக்கள் ஆதரித்து அரவணைத்தனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், அமரர்கள் உயர்திருவாளர்கள் தேசிகம் பிள்ளை (கல்விக் கழகம்), மக்கள் தலைவர் வ. சுப்பையா, கு. கா. இராசமாணிக்கம் பிள்ளை மற்றும் மேட்டுப்பாளையம் இராமலிங்கம் ஆவர். இவர்களை இறுதிவரை நன்றியுடன் நினைவு கூர்ந்து கொண்டிருந்தார். புதுவையில் கவிஞரேறு வாணிதாசனார், மு. த வேலாயுதனார், திருமுடி சேதுராமன், புதுவைச் சிவம், கம்பவாணர் அருணகிரி, செந்தமிழ்த் தொண்டர் சிவ. கண்ணப்பர் ஆகியோருடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தார். தமிழகத்தில் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார், தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரம், முனைவர் மு. வரதராசனார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதன், ஒளவை துரைசாமி பண்டிதர், லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார், முத்து.ராசா கண்ணனார், முதுபெரும்புலவர் ஆறுமுக முதலியார், முத்து சண்முகம் பிள்ளை, முனைவர் வ.சுப.மாணிக்கம் முதலிய பெருமக்களுடன் தொடர்பும் நட்பும் கொண்டிருந்தார்.


1980 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்று நூல்கள் எழுதும் தன்னுடைய பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தார். 1975 - ஆம் ஆண்டுக்குள் தன்னுடைய உன்னத நூல்களான தமிழ் அகராதிக்கலை, தமிழ் இலத்தீன் பாலம், கெடிலக்கரை நாகரிகம், தமிழ் நூல்தொகுப்புக் கலை முதலியவற்றை