12
தனித்தமிழ்க் கிளர்ச்சி
வழங்கும் போது இவரைப் பற்றி அச்சடித்து வழங்கியக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "ஐம்பது ஆண்டுகளாகப் பாவேந்தர் பாரதிதாசன் பாடியது போல அன்னைத் தமிழ்மொழிக்குத் துறைதொறும் துறைதொறும்துடித்தெழுந்து அருந்தொண்டாற்றிய பேராசிரியர் சுந்தர சண்முகனார் அவர்களுக்குத் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற பட்டத்தினை வழங்கி மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் பெருமை கொள்ளுகிறது." காமராசர் பல்கலைக்கழகம் தங்கள் கல்விக் குழுவின் வாழ்நாள் உறுப்பினர் ஆகவும் இவரை நியமனம் செய்தது.
பாவேந்தர் பாரதிதாசரொடு பல ஆண்டுகள் நெருங்கிப் பழகிய இவர், பாரதிதாசரொடு பல ஆண்டுகள் என்று ஒரு நூல் எழுதியுள்ளார். இவர் தன் வாழ்நாளில் பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார். இவர் பெற்ற விருதுகளில் தலையாயது தமிழக அரசு 15.01.1991 - இல் வழங்கிய திருவள்ளுவர் விருதாகும். அடுத்த பெரிய விருது சென்னை எம்.ஏ.சி அறக்கட்டளை விருதாகும். இவர் பெற்ற பல பட்டங்களில் இவர் மிகவும் விரும்பிய பட்டங்கள் மூன்றாகும். ஒன்று இவருடைய குருபீடமான ஞானியார் மடாலயம் வழங்கிய "ஆராய்ச்சி அறிஞர்" என்ற பட்டம், இரண்டாவது இவருடைய செந்தமிழாற்றுப்படை என்ற நூலுக்காக நாவலர் சோமசுந்தர பாரதியாரால் வழங்கப்பட்ட "இயற்கவி" என்ற பட்டம், மூன்றாவது இவருடைய உற்ற நண்பர் புதுச்சேரி உயர்திரு அமரர் கு.கா. இராசமாணிக்கம் பிள்ளை அவர்கள் வழங்கிய "புதுப்படைப்புக் கலைஞர்" என்ற பட்டமாகும். இந்த வரலாற்றை எழுதும் அவருடைய மகனான நான் அவருக்குக் கிடைத்த பட்டங்களிலே மிகச் சிறந்ததாகக் கருதுவது, அவருடைய மாணாக்கர்கள் அவரை அன்புடன் "எங்கள் பேராசான்" என்று அழைப்பதையே ஆகும்.