பக்கம்:தனித் தமிழ்க் கிளர்ச்சி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்

25



வீரம்

பூரித்துத் தோட்கள் புடைத்திடப் போர்செய்யும்
வீரத்தில் சிறந்தவர்நம் வியன்தமிழர் அம்மானை
வீரத்தில் சிறந்தவர்நம் வியன்தமிழர் எனினிந்நாள்
ஓரத்தில் கைகட்டி ஒதுங்குவதேன் அம்மானை
உளவுசெய்து மாற்றார்கள் ஒதுங்கவைத்தார் அம்மானை (34)

தாய்மார்களே முன்பு தமிழ்நாட்டில் தம்மிளஞ்
சேய்களைப் போருக்குச் செல்லவிட்டார் அம்மானை
சேய்களைப் போருக்குச் செல்லவிட்டார் எனினின்று
தாய்மார்கள் போரென்றால் தயங்குவதேன் அம்மானை
தயக்கத்தை ஆண்பதரே தந்துவிட்டார் அம்மானை (35)

சமயம்

புதுப்புதிய சுவைதன்னைப் புலனாக்கும் தமிழ்மொழிதான்
மதிப்புள்ள சங்கநூல் மாண்புடைய தம்மானை
மதிப்புள்ள சங்கநூல் மாண்பிருக்கப் பித்தான
மதச்சண்டை நம்தமிழில் மண்டியதேன் அம்மானை
மண்டியதவ் ஆரியர்செய் மயக்கத்தால் அம்மானை (36)

உய்வதனைக் கருதி உயர்ந்திடுநம் தமிழ்முன்னோர்
தெய்வ வணக்கந்தாம் செய்துவந்தார் அம்மானை
தெய்வ வணக்கந்தாம் செய்பவரை இன்றுசிலர்
எய்வதுபோல் கடுமொழியால் எதிர்ப்பதேன் அம்மானை
எதிர்க்கலாம் ஆரியர்கள் ஏய்ப்பதையே அம்மானை (37)


34,35- வீரம் செறிந்த தமிழ்மக்களை மயக்கி எதிரிகள் கோழைகளாக்கி விட்டனர். ஆடவரின் அடக்குமுறையால் பெண்டிரும் கோழைகளாயினர்.
36,37,38- ஆரியர் கூட்டுறவால் தமிழ் நாட்டில் மதச்சண்டைகளும், செயற்கை வழிபாட்டு முறைகளும் பெருகின. இதனால், தெய்வ வணக்கமே எதிர்க்கப்படும் நிலைமையை அடைந்தது. உண்மையில் தெய்வ வணக்கம் வேண்டாம் என்பது கருத்தன்று.