பக்கம்:தன்னுணர்வு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20

வாய்ப்பெருமை காட்டுகின்றது. ஆனால் இத்தகைய மாறுதல்களால் மக்கட்குப் பண்பு வளர்ச்சி ஏற்படக் காணோம். ஒரு நன்மை பெறவேண்டி இன்னொரு நன்மையை விட வேண்டியுள்ளது. மக்கள் கூட்டம் புதிய கலைகளைத் தோற்றுவிக்கின்றது. ஆனால் அதற்கீடாகப் பழைய இயற்கை உணர்வுகளையும், மனவாற்றல்களையும் இழத்தல் செய்கின்றது. உயரிய வெள்ளையுடை பூண்டு கையில் எழுதுகோலும், சட்டைப்பையில் மணிப்பொறியும், காசோலையும் வைத்துக்கொண்டு படிக்கவும், எழுதவும், எண்ணவும் கற்றுள்ள நாகரிக மாந்தன் எங்கே? வில்லும், வாளும், ஈட்டியும் எடுத்துக்கொண்டு ஓர் ஓலைக் குடிலில் அரைகுறை உடையுடன் உலவிய முன்னைய மாந்தன் எங்கே? ஆனால் இந்த இருவருடைய உடல் நிலையைப் பார்க்குங்கால் நாகரிக மாந்தனுக்கு முன்னை நாளைய வன்மை தளர்ந்து விட்டதைக் கண்டுகொள்ள முடிகின்றது

நாகரிக மாந்தன் இயங்கிகள் பல செய்திருக்கின்றான்; ஆனால் தன் கால்களின் முழு வலிமையையும் இழந்து விட்டான். பிரம்பு பிடித்துக்கொண்டு நடக்கின்றான்; ஆனால் தசையின் வலிவு குன்றிவிட்டது. வேண்டும்போது படித்துக் கொள்ளலாம் என்று பல குறிப்புகளை எழுதி வைத்திருக்கின்றான்; அதனால் நினைவாற்றல் அவனை விட்டு நீங்கிவிட்டது; புத்தகப் பெருக்கங்கள் அறிவை அழுத்துகின்றன. நாகரிக உணவுகளால் வல்லமை குறைந்து விடவில்லையா? உயிர் முறிக்குழும்பு, (Insurance Company) தோன்றிய பின்தான் உயிரிழப்புகள் மிகுந்து போயின

மாந்தனின் உயரத்திலும், பருமனிலும் எங்ஙன் மாறுபாடில்லையோ, அங்ஙனே உள்ள வளர்ச்சியிலும் மாறுபாடில்லை. இருபதாம் நூற்றாண்டின் அறிவு நூல், இயற்கை நூல், உயிர் நூல், பூத நூல், வேதி நூல் முதலியன யாவும் சேர்ந்து முன் இருந்த பெருமறவர்தம்மையும், பேரறிஞர் தம்மையும் உண்டாக்கக்கூடவில்லை. மாந்தன் உடைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தன்னுணர்வு.pdf/32&oldid=1162394" இலிருந்து மீள்விக்கப்பட்டது