பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

115

உண்டு. காஃபியைப் போல் தேயிலை சீக்கிரத்தில் நோயினால் தாக்கப்படுவதில்லை. பூச்சி புழுக்களும் காஃபிச் செடிக்கு அழிவு விளைவிப்பதைப் போல் தேயிலைக்கு விளைவிப்பதில்லை. ஏதேனும் ஓராண்டில் காஃபியின் விளைச்சல் பிற நாடுகளில் மிகுதியாக இருந்தால், உடனே நம் நாட்டில் விலை அதிகமாகக் குறைந்து விடும். அதனால் நம் நாட்டுத் தோட்ட முதலாளிகளுக்குப் பெரும் அளவு பொருள் இழப்பு ஏற்படும். இவை போன்ற தொல்லைகள் தேயிலைத் தோட்டக்காரர்களுக்கு ஏற்படுவதில்லை. பெரும்பாலும் காஃபிப் பயிர்த் தொழிலில் தோல்வி கண்டவர்கள், தங்கள் காஃபித் தோட்டங்களை அழித்துவிட்டுத் தேயிலை பயிரிட்டனர்.

நீலகிரி மலையின் தேயிலைப் பயிர்த்தொழில் வரலாறு கி. பி. 1833-ஆம் ஆண்டிலிருந்து துவங்குகிறது. அங்கு வாழ்ந்த கிருஸ்டீ (Christie) என்பவர், கூனூருக்கருகில் தேயிலையைப் போல் சுவையுடைய ஒருவகைச் செடி நிறைய முளைத்திருப்பதைக் கண்டார். இம்மலையிலும் தேயிலையைப் பயிரிட்டால் என்ன என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. உடனே உயர்ந்த ரகமான தேயிலைச் செடிகளைச் சீன நாட்டிலிருந்து தருவிக்க ஏற்பாடு செய்தார். ஆனால் அவைகள் நீலகிரி வந்து சேர்வதற்கு முன்பே கிருஸ்டீ இறந்து விட்டார். சைனாவிலிருந்து தருவிக்கப்பட்ட செடிகள் நீலகிரி மலையின் பல பகுதியிலிருந்த மக்களுக்கும் பயிரிடுவதற்காகக் கொடுக்கப்பட்டன.

கி. பி. 1835-ஆம் ஆண்டு இந்திய நாட்டின் கவர்னர் ஜெனரல், ஒரு குழுவை ஏற்படுத்தி நீலகிரி, குடகு, மைசூர் முதலிய மலைகளில் தேயிலை பயிரிட முடியுமா என்பதை அறிவதற்காகக் கல்கத்தாவிலிருந்து அனுப்பி வைத்தார். சீனாவிலிருந்து நல்ல விதைகளை வரவழைத்துச் சோதனைத் தோட்டங்களில் பயிரிட்டனர். நீல