பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

155

வடைக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு தானியம் படகர்களால் ஆண்டுதோறும் இவர்கட்கு வழங்கப்படும். படகர்களைப் போன்று இவர்களும் ஆண்டுதோறும் தோடர்களுக்கு நன்கொடைத் தானியம் வழங்குவது வழக்கம். அதற்குக் 'குடு' (Gudu) என்று பெயர். படகர்களிடையே மூன்று பிரிவுகளுண்டு. இப் பிரிவினர் தங்களுக்குள் மணத் தொடர்பு கொள்வதில்லை. கோதர்கள் இசைஞர்கள். இவர்கள் நீலகிரி மலையிலுள்ள எல்லா இனத்தார்க்கும், திருமணக் காலங்களிலும், விழாக் காலங்களிலும், இசைப் பணி புரிகின்றனர்.

திருமணம் :

திருமணம் பெற்றோர்களின் இசைவுடனேயே நடைபெறுகின்றது. மணமகன் மாமனாரின் வீட்டிற்குச் சென்று, வணக்கம் செலுத்திப் பரிசுப் பொருள்களை அளித்துவிட்டுத் திரும்புவதன் மூலம் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்குரிய சடங்குகள் அதிகமாக ஒன்றுமில்லை. பரிசப்பணத்தைக் கொடுத்த பிறகு, மணமகன் மணமகளைத் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வருவான். அதன் பிறகு விருந்து ஒன்று நடைபெறும். இத்துடன் திருமணம் முடிவடைகிறது. முதல் மனைவிக்குப் பிள்ளைப்பேறு இல்லை யென்றால்தான், ஆண்கள் இரண்டாவது மணம் செய்து கொள்ளுகின்றனர்.

மணவிலக்கு :

மணவிலக்கு கோதர்களிடையே அதிகமாக நடைபெறுவதில்லை. பொறுப்பற்ற தன்மையும், குடிவெறியும், சோம்பலும், ஒழுக்கக் குறைவும் உடைய பெண்ணே மணவிலக்கிற்குரியவளாகக் கருதப்படுகிறாள். மணவிலக்கு ஊரிலுள்ள பெரியவர்கள் முன்னிலையில் நடைபெறும். மிகவும் சிக்கலான வழக்காக இருந்தால், கோதர்கள் வாழும் ஏழு ஊர்களிலு