பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

157

நன்மை பெருக வேண்டும் என்று இறைவனை வேண்டி அவ்விழாவைக் கொண்டாடுவர். ஜனவரித் திங்களில் உவா நாள் கழிந்து, முதல் திங்கட்கிழமையன்று இவ் விழா துவங்கும். பிறகு பதினைந்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இப் பதினைந்து நாட்களையும், ஒவ்வோர் ஆண்டிலும் ஓய்வு நாட்களாக இவர்கள் கருதுகின்றனர். இத் திருவிழாவின் போது, ஆண்களும் பெண்களும் ஒன்றாகக் கூடி ஆடும் ஆட்டம் மிகவும் ஆபாசமானது.

அருகில் வாழும் படகர்களில் முக்கியமானவர்களைக் கோதர்கள் இவ்விழாவிற்கு அழைப்பது வழக்கம். இவர்களுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு வராவிட்டால், அச்செயல் பெரும் அவமானத்திற்குரியதாகக் கோதர்களால் கருதப்படும். அவ்வாறு வந்து விழாவில் கலந்து கொள்ளாத படகர்களின் நிலங்களில் யாரும் பணி புரிவதில்லை. வேறு எந்தச் சடங்குகளிலும் கலந்து கொள்வதில்லை. காமட்டராயன் விழா நடைபெறும் அப்பதினைந்து நாட்களும், கோயிலின் முன்னால் மூட்டிய தீ அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும். கோயிலின் பழைய கூரையை நீக்கிவிட்டு, மூங்கிலினால் புதிய கூரை வேய்வார்கள். இறைவனுக்குச் சிறப்பான ஆடைகளும், தலைப்பாகையும் அணிவித்து அலங்காரம் செய்வர். திருவிழாக் காலங்களில் எல்லாரும் சேர்ந்து வேட்டைக்குச் செல்வார்கள். தேவாதி ஓர் இரும்புத் துண்டை நெருப்பில் போட்டுப் பழுக்கக் காய்ச்சுவான். பூசாரி அவ்விரும்புத் துண்டைச் சுத்தியால் அடிப்பான். இவ்வாறாகப் பலவிதச் சடங்குகள் நடைபெறுகின்றன.

இறுதிச்சடங்கு :

இறக்கும் நிலையில் இருப்பவரின் வாயில் படகர்களைப் போன்று வீரராயப் பணத்தைப் போட்டு நீர் ஊற்றும் பழக்கம் இவர்களிடமும் உண்டு, பிணத்தின் கைகளை மார்பின் மேல் கிடத்திப் பெரு விரல்களை