பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

167

மற்ற இனத்தார்க்குப் பணிபுரிந்து வருகின்றனர். குறும்பர்கள் இருளர்களைக் கண்டு மிகவும் அஞ்சுவார்கள். காரணம் இவர்களும் பெரிய மந்திரவாதிகள் என்பதே. இருளர் குலத்தைச் சேர்ந்த பெண், வெளியில் வேலைக்காகச் செல்லும்போது, பெண் புலிகளைத் தன் குழந்தைகளுக்குக் காவலாக வைத்துவிட்டுச் செல்லுவாள் என்று கூறப்படுகிறது.

மலைகளில் வாழும் இப் பழங்குடி மக்களின் நலனுக்காக, மத்திய அரசாங்கமும், சென்னை அரசாங்கமும் நிறையப் பொருட் செலவு செய்கின்றன. இவர்களின் கல்விக்காக ரூ. 10.67 இலட்சம் ஒதுக்கியுள்ளனர். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின்படி மாணவர்கள் தங்கிப் படிக்கக் கூடிய 9 பள்ளிகளும், 11 சாதாரணப் பள்ளிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில், 16 பள்ளிகளும் துவக்கப்பட்டுள்ளன. இவைகளன்றி 4 தங்கும் விடுதிகளும் நடத்தப்படுகின்றன.

மலைவாழ் மக்களில் பெரும்பாலோர் உழவுத தொழில் செய்ய நிலம் இல்லாதவர்களாக இருக்கின்றனர். ஒருசிலர் தாம் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். உழவுத் தொழில் செய்வதற்கும், உழவுக் கருவிகள் வாங்குவதற்கும் அவர்களிடம் பணவசதி கிடையாது. ஆகவே உழவு மாடுகள், உழவுக் கருவிகள், விதைகள் முதலியனவாங்குவதற்காக இவர்களுக்கு மானியங்கள் வழங்குவதற்கென்று ரூ 5.8 இலட்சம் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

சில மலைவாழ் மக்கள் கூடைமுடைதல், தச்சுவேலை முதலிய சிறு கைத்தொழில்களைச் செய்தல் ஆகியவற்றில் வல்லவர்களாக இருக்கின்றனர். இத் துறையில் அவர்களுக்கு உதவியளிப்பதற்காக ரூ 2.75 இலட்சம் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. நீலகிரிப் பீடபூமியிலுள்ள கோதகிரியில் ஒருபயிற்சி உற்பத்தி நிலையம்