பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

217

தது. ஆனால் இப்பொழுது பெரும்பாலோர் வெள்ளை ஆடையே உடுக்கின்றனர்.

இவர்களிடையிலும் மானரீகமுறை மிகவும் கட்டுப்பாட்டோடு கடைப்பிடிக்கப்படுகிறது. தந்தையோடு பிறந்த அத்தையின் மகளே பெரும்பாலும் மணமகளாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறாள். வயதுப் பொருத்தம் கூட இவர்களால் கவனிக்கப்படுவதில்லை. சில சமயங்களில் மணமகனைவிட மணமகள் மிகவும் வயதில் மூத்தவளாக இருப்பதுண்டு. மிகவும் இளைஞனான ஒருவனுக்கு ஒன்றுவிட்ட அத்தைமார்களின் வீட்டிலிருந்து, இரண்டு மூன்று பெண்களைத் திருமணம் செய்து வைப்பதுண்டு. பருவமடையாத அச்சிறுவனைவிட, வயதில் மூத்திருக்கும் மனைவியர், அவர்கள் குலத்திலே விருப்பமுள்ள வேறு ஆடவர்களோடு தொடர்பு கொள்ளுவார்கள். அவ்வாறு தொடர்பு கொள்ளுவதன் மூலம் பிறக்கும் குழந்தைகள் சட்டப்படி கணவனுக்கே பிறந்தவைகளாகக் கருதப்படும். அதனால் ஒன்பது அல்லது பத்து வயதுள்ள சில சிறுவர்கள் (Putative fathers) இரண்டு மூன்று குழந்தையருக்குத் தந்தையராக இருப்பதுண்டு. இவர்களுடைய திருமணம் சடங்குகளற்றது. மணமகனின் பெற்றோர் மணமகளுக்குப் பரிசம் (Bride Price) வழங்குவர். மணமகனின் தமக்கை பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டுவாள். பிறகு எல்லோரும் விருந்துண்பர். இத்துடன் திருமணம் முடிவடைகிறது.

‘வீட்டு வைப்பு' என்ற புதுமையான முறையொன்று இவர்களால் கடைப்பிடித்து வரப்படுகிறது. ஏதேனும் ஒரு குடும்பத்தில் ஆண் சந்ததியில்லாமல் ஒரு பெண் மட்டும் இருந்தால் அப்பெண்ணை யாருக்கும் திருமணம் செய்து கொடுப்பதில்லை. அவ்வாறு திருமணம் செய்து கொடுத்தால் அத்தோடு அவர்கள் குடி அருகிவிட்டதாக எண்ணுகிறார்கள். அத்தகைய