பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

நஞ்சூட்டிக் கொன்ற செய்தியை, மற்ற புலையர்கள் அறிந்தவுடன் எல்லோரிடமும் பணம் வசூலித்து அவனுக்குப் புத்தாடை வாங்கி வழங்குவர். அவனை ஒரு நாற்காலியில் அமர்த்தி ஊர்வலமாகக் கொண்டு வருவர். ஊர்வலத்தின்போது அவனைச் சுற்றிப் பலர் ஆடிக்கொண்டு வருவர்.

பளியர் :

பளியர்கள், பழனிமலையில் வாழ்வோரில் மிகவும் பிற்பட்ட இனத்தார். மேல் பழனிமலையிலும், வருசநாட்டுப் பள்ளத்தாக்கிலும் உள்ள காடுகளில், சிறு சிறு கூட்டங்களாகச் சிதறி வாழ்கின்றனர். மஞ்சம்பட்டிக்கு அருகிலுள்ள காடுகளிலும் வாழ்கின்றனர். ஆனால் இவர்களுடைய உச்சரிப்பு மிகவும் வேறுபட்டும், புரிந்துகொள்ள முடியாமலும் அமைந்துள்ளது. புலையர்களைவிட நாகரிகத்தில் இவர்கள் மிகவும் கேவலமான நிலையில் உள்ளனர். ஆனால் இவர்கள் மாட்டிறைச்சியை உண்பதில்லை. பெரும்பாலும் இவர்கள் மரத்தின் மேல் அமைத்த பரண்களிலும், குகைகளிலும் பாறை இடுக்குகளிலும் வாழ்கின்றனர். சில சமயங்களில் புற்களால் அமைக்கப்பட்ட குடிசைகளில் வாழ்கின்றனர். உடலை மறைக்கப் போதிய அளவற்ற ஆடையையே அணிகின்றனர். அவ்வாடையோடு தழைகளையும், புற்களையும் சேர்த்து இடுப்பில் சுற்றிக் கொள்கின்றனர். இவர்கள் ஆடை மிகவும் அழுக்கேறித் தூய்மையற்றிருக்கும். இலைகளையும், கிழங்குகளையும் (பெரும்பாலும் மரவள்ளிக் கிழங்கு) தேனையுமே முக்கிய உணவாகக் கொள்கின்றனர். கிழங்குகளை ஒரு குழியினுள் போட்டு, அதன்மேல் சுள்ளிகளைப் பரப்பித் தீயிட்டுச் சுட்டுத் தின்கின்றனர். இவர்கள் இருப்பிடத்திற்கு முன்னால் எப்பொழுதும் தீ எரிந்துகொண்டே இருக்கும். காட்டு விலங்குகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவே அவ்வாறு செய்கின்றனர்.