பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

235

சேர்ந்த பாதிரிமார் தங்களுக்கென ஒரு மனையை அமைத்தனர். அது இப்பொழுது 'கிளவரக்' என்று அழைக்கப்படுகிறது. பம்பாய்ப் பட்டாளத்தைச் சேர்ந்த மேஜர் ஜே. எம். பார்ட்ரிட்ஜ் என்பவர் கி. பி. 1852ஆம் ஆண்டு இங்கு வந்து கூடாரமடித்து ஏரிக்கருகில் தங்கினார். குளிரின் கொடுமையையும், புயலின் வேகத்தையும் தாள முடியாத அவர் ஒரு சிறு மனையை அமைத்துத் தங்கினார். அவ்விடம் இப்போது 'பம்பாய் ஷோலா' (Bombay Shola) என்று அழைக்கப்படுகிறது. அவருக்கு உரிமையான தோட்டம் ஒன்றும் அங்கு இருந்தது. முதன் முதலாகப் பழனி மலையில் நீலப் பிசின் மரம் என்ற ஆஸ்திரேலிய மர வகையை நட்டுப் பயிரிட்டவர் இவரே. இவர் வீட்டின் முன்னால் இருந்த இரண்டு நீலப் பிசின் மரங்களில் ஒன்று இன்றும் உள்ளது. அப் பகுதியில் மிகவும் பெரிய மரம் அதுதான். கோடைக்கானல் வாசிகளுக்குப் பயன்படும் வகையில் முதன் முதலாக இசைக் கலைஞர்களைக் குடியேற்ற முயன்றவரும் இவரே. இவர் வீட்டிற்கருகில் ஒரு கடையும் இருந்ததாகக் குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது.

மேற்கூறிய எழுவருமே கோடைக்கானலின் முன்னோடிகள் (Pioneers) என்று கூறலாம். கி. பி. 1853-இல் இவர்களுக்குரிமையான ஏழுமனைகளே கோடைக்கானலிலிருந்தன. கி. பி. 1861-ஆம் ஆண்டு, மேலும் மூன்று வீடுகள் கட்டப்பட்டன. கி. பி. 1854. ஆம் ஆண்டு உச்சிக்குச் செல்லும் குதிரைப் பாதையைச் செப்பனிட ரூ 4,500 செலவிடப்பட்டது. கோடைக் கானலில் வாழ்ந்த கிருத்தவப் பாதிரிகள் ஒரு கல் நீளமுள்ள பாதையொன்றை நகரில் அமைத்தனர். மேலும் 6 கல் நீளமுள்ள பாதை அங்கு வாழ்வோரால் அமைக்கப்பட்டது. 1860 ஆம் ஆண்டு சென்னை மாநில ஆளுநராக இருந்த சர் சார்லஸ் டிரிவெல்யான் என்பவர் தோப்பி