பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

கல்விக் கூடங்கள்

புனித இதயக் கல்லூரி :

புனித இதயக் கல்லூரி (Sacred Heart Collage) கி. பி. 1895-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதில் ஏறக்குறைய 2000 மாணவர்கள் பயின்று வெளியேறியிருக்கின்றனர். இந்திய மாணவர்களல்லாமல், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கொலம்பியா, பர்மா முதலிய நாடுகளிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து கல்வி பயில்கின்றனர். இது கோடைக்கானலுக்குச் செல்லும் பாதையில், செண்பகனூரில் அமைந்துள்ளது. இது ரோமன் கத்தோலிக்கருக்கரிய சமயக் கல்லூரியாகும். இப்பள்ளி துவக்கப்பட்ட காலத்தில் பாதிக்குமேல் ஃப்ரெஞ்சு நாட்டு இளைஞர்கள் கல்வி பயின்றனர். உலகப் போர்களினால் வெளிநாட்டிலிருந்து வரும் மாணவர்களின் தொகை குறைந்துவிட்டது. இக் கல்லூரி கட்டப்பட்டிருக்கும் இடம் கி. பி. 1878-ஆம் ஆண்டிலிருந்து பலதடவை சிறுசிறு பகுதிகளாக வாங்கப்பட்டது. ஒரு விவசாயப் பள்ளியையும், தொழிற்பள்ளியையும் நிறுவும் நோக்கத்தோடு இவ்விடம் வாங்கப்பட்டது. சின்கோனா மரங்களும் வேறு சில பயிர்களும் இங்கு முதலில் பயிரிடப்பட்டன. ஆனால் அவை நல்ல முறையில் விளையாத காரணத்தால் விவசாய, தொழில் கல்லூரிகள் நடத்தும் எண்ணம் கைவிடப்பட்டது. பிறகு இப்பொழுது உள்ள சமயக் கல்லூரி துவக்கப்பட்டது.

கோடைக்கானலில் வாழும் மக்களுக்கு இக் கல்லூரி மிகவும் அறிமுகமான ஒன்று. செண்பகனூரிலுள்ள யூகிலிப்டஸ் காட்டின் வழியாக வரும்போது, கண்கவரும் அழகிய தோட்டத்தின் நடுவே கலையழகுமிக்க இக்கல்லூரிக் கட்டிடங்கள் நிமிர்ந்து நிற்பதைக் கண்டு மகிழலாம். கோடைக்கானலுக்கு வரும் உந்து