பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

பெயர் 'சால்விக்' (Solvik) என்பதாகும். ஹைகிளெர்க் பள்ளி இருக்கும் அதே மலையின்மீது தான் இதுவும் அமைந்துள்ளது. இங்குப் பயிலும் மாணவர்கள் தங்கள் தாய் மொழியிலேயே கல்வி பெறுகின்றனர். ஹைகிளெர்க் பள்ளியில் பயிலும்போது பல நாட்டு மாணவர்களோடு சேர்ந்து பழகும் வாய்ப்பு இருந்தது. இப்பொழுது அது இல்லை. இந்திய நாட்டில் உள்ள ஸ்வீடிஷ் பள்ளி இது ஒன்றுதான். எனவே, இந்திய நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வாழும் ஸ்வீடிஷ்காரர்கள், தங்களுடைய குழந்தைகளை 'சால்விக்'கிற்கே அனுப்புகின்றனர். கடந்த சில ஆண்டுகட்கு முன்பாக, ஸ்வீடன் நாட்டுப் பாராளு மன்றமும் இதை அங்கீகரித்தது. இப்பள்ளி உருவத்தில் சிறியதாக இருந்தாலும் ஈடற்ற அழகோடு ஏரியைப் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது.

தமிழ்ப் பள்ளிகள் :

கோடைக்கானலில் வாழும் தமிழ் மாணவர்கள் பயிலுவதற்கென்று பல தமிழ்ப் பள்ளிகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. யூனியன் சர்ச் கோடைக்கானலில் நிறுவப்பட்ட போது பாதிரியாரின் இல்லத்திற்கருகில், அமெரிக்கன் மிஷனைச் சார்ந்தோர் ஒரு துவக்கப் பள்ளியை நிறுவினர். கோடைக்கானலில் மக்கட் பெருக்கம் ஏற்பட்டதும், நகராட்சியினர் வான்ஆய்வுக் கூடப் பாதையிலும், உந்து வண்டி நிலையத்திற்கருகிலும் தமிழ் மாணவர்களுக்கென்று பல துவக்கப் பள்ளிகளை நிறுவினர். கி. பி. 1942-ஆம் ஆண்டு 'தோபிகானா'விற்கு எதிரில் ஒரு நடுநிலைப் பள்ளி துவக்கப்பட்டது. இது இப்பொழுது உயர் நிலைப் பள்ளியாக வளர்ந்துள்ளது. ரோமன் கத்தோலிக்கச் சமயத்தாரால் மூன்று தமிழ்ப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. அவை மேல் ஏரிப் பாதையிலும், கான்வெண்ட் பாதையிலும் அமைந்துள்ளன.