பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

271

"வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர் வேங்கைக்
கொம்பார் சோலைக் கோலவண் டியாழ்செய் குற்றாலம்
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக்
கொல்லை முல்லை மெல்லரும் பீனும் குற்றாலம்
பக்கம் வாழைப் பாய்கனி யோடு பலவின்தேன்
சொக்கின் கோட்டுப் பைங்கனி தூங்கும் குற்றாலம்
மலையார் சாரல் மகவுடன் வந்த மடமந்தி
குலையார் வாழைத் தீங்கனி மாந்தும் குற்றாலம்
மைம்மா நீலக் கன்னியர் சாரல் மணிவாரிக்
கொய்மா ஏனல் உண்கிளி ஓப்பும் குற்றாலம்
போதும் பொன்னும் உந்தியருவி புடை சூழக்
கூதன் மாரி நுண்டுளி தூங்குங் குற்றாலம்
அரவின் வாயின் முள்ளெயி றெய்ப்ப அரும்பீன்று
குரவம் பாவை முருகமர் சோலைக் குற்றாலம்
பெருந்தண் சாரல் வாழ்சிறை வண்டு பெடைபுல்கிக்
குருந்தம் ஏறிச் செவ்வழி பாடுங் குற்றாலம்".

இவ்வாறு இலக்கியப் புகழ் பெற்று விளங்கும் குற்றாலம் மலைபடு பொருள்களுக்கும் பெயர் பெற்றது. கொய்யா, பம்பிளிமாஸ், வாழை, மா, பலா, ஆரஞ்சு, வங்கிஸ்தான், தென்னை, கழுகு, சந்தனம், குங்கிலியம், செண்பகம், ரோஜா, முல்லை, ஜாதிக்காய், கிராம்பு, ஏலம், முதலியன இங்கு நிறைய விளைகின்றன, அருவி நீரும், இளந்தென்றலும் இங்கு வாழ்வோரின் உள்ளத்தை உவகையிலாழ்த்துவதோடு உடலுக்கும் நலம் பயக்கின்றன. இங்கு அழகிய வண்ணக் கற்கள் பல வடிவங்களோடு சிதறிக்கிடந்து வைரத்தைப் போன்று ஒளி வீசுகின்றன. எங்குப் பார்த்தாலும் பசுமரங்கள்! நீல நிறமான மலைமுகடுகள்! மஞ்சு தவழ்ந்து மகிழ்ந்து ஆடும் குன்றுகள் ! அக்குன்றுகளைச் சுற்றியுள்ள காடுகளில் ஆயிரம் ஆயிரம் வண்ண மலர்கள் ! எங்கு பார்ப்பினும் வருவாய் நல்கும் வளமிக்க காஃபித் தோட்டங்கள்!

குற்றாலம் என்ற பெயரால் தமிழகத்தில் இரண்டு ஊர்கள் உள்ளன, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இக்குற்றாலம், நீர்வீழ்ச்சிக்குப் பெயர் பெற்ற