பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

குடி மக்கள். சமவெளியில் வாழும் மக்களோடு அதிகத் தொடர்பு கொண்டிராத காரணத்தால் இவர்களுடைய பழக்கவழக்கங்களும் பண்பாடுகளும் சிறிது வேறுபட்டே இருக்கின்றன. பேசும் மொழி தமிழே என்றாலும் சிதைத்துப் பேசுகின்றனர். அவர்கள் எண்ணிக்கை பின் வருமாறு.

ஆத்தூர் வட்டம் 14,000
சேலம் வட்டம் 10,000
ஊத்தங்கரை வட்டம் 10,000
நாமக்கல் வட்டம் 12,000

இம்மலை வாழ் மக்களில் ஒரு சிலர் மலைகளினின்றும் நீங்கி ஓமலூர், ஊத்தங்கரை முதலிய சமவெளி ஊர்களிலும் வாழ்கின்றனர். இம்மலையாளிகளும், மலைக்காய்ச்சலுக்குப் பேர்போன இவர்கள் வாழ்விடங்களும், பழமையில் ஊறிப்போன இவர்கள் பழக்கவழக்கங்களும் நம்மை வியப்பிலாழ்த்துவதோடு மக்களின நூல் ஆராய்ச்சி (Ethnology)க்குரிய பாடங்களாக விளங்குகின்றன. இம்மலையாளிகள், காஞ்சிபுரமே தங்கள் ஆதி ஊர் என்று கூறுகின்றனர். இவர்கள் இம் மலைகளில் குடியேறியது பற்றிக் கர்ண பரம்பரைக் கதையொன்று கூறப்படுகிறது.

பெரியண்ணன், நடுவண்ணன், சின்னண்ணன் என்று பெயரிய மூன்று உடன் பிறந்தார்கள் ஒரு நாள் மூன்று வேட்டை நாய்களோடு வேட்டைக்குச் சென்றனராம். மூவரும் காட்டின் மூன்று பகுதிகளுக்குப் பிரிந்து சென்று வேட்டையாடினர். அப்பொழுது பெருமழை பிடித்து இரண்டு நாள் ஓயவில்லை. அவர்களாலும் காட்டை விட்டு வெளியேற முடியவில்லை. ஆனால் அவர்களுடைய நாய்கள் மட்டும் எப்படியோ வீடு சேர்ந்தன. கணவன்மார் இன்றித் தனியே வீடு திரும்பிய நாய்களைக் கண்ட மனைவியர், தங்கள் கணவன்மார் காட்டில் கொடு விலங்குகளால் இறந்துபட்டதாகக்