பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

கரையில் வாழும் மக்களைப்போல் குடுமி வைத்துக் கொள்கின்றனர். பருவம் எய்தியதும் கொல்லிச் சிறுமியரும் முன் குடுமியை நீக்கிவிட்டுத் தலை முழுதும் நீண்ட கூந்தல் வளர்க்கின்றனர். பச்சை மலையாளிகளிடமும் இப் பழக்கம் உண்டு . ஆனால் சிறுமியர் பருவம் எய்தும் வரையிலும் முன் குடுமியை நீக்க அவர்கள் காத்திருப்பதில்லை.

(2) கொல்லி மலையிலுள்ள பெண்கள் வெண்மையான பருத்தி ஆடையை, மார்பை மூடி அக்குளில் படியுமாறு சுற்றிக் கட்டுகின்றனர். அவ்வாடை முழு உடலையும் மறைத்துக்கொண்டிரா விட்டாலும் முழந்தாளுக்கும் சற்றுக் கீழே தொங்கிக் கொண்டிருக்கும். இப் பழக்கத்தைக் கேரளத்தில் காணலாம். பச்சை மலையாளப் பெண்களும், பெரிய மலையாளப் பெண்களும் சமவெளியில் வாழ்பவர்களைப் போலவே வண்ணப் புடவை யணிகின்றனர்.

(3) கொல்லி மலைப் பெண்கள் தங்கள் ஆடையினுள்ளே 3 முழ நீளமும் 1 அடி அகலமுமுள்ள வெண்மையான துணி (Loin - cloth) ஒன்றையும் அணிகின்றனர். அதை எந்தப் பயன் கருதியும் அணிவதில்லை. அழகுக்காகவே அணிகின்றனர். கேரள நாட்டில் வாழும் பெண்களுக்கு இத்துணி மிகவும் எடுப்பான தோற்றத்தை அளிக்கிறது. கொல்லிமலைப் பெண்களைப்போலவே இத்துணியை மற்ற இருசாதி மலையாளப் பெண்களும் தங்கள் புடவைகளுக்குள் அணிகின்றனர், திருவாளர் கிருஷ்ணசாமி ஐயங்கார், கேரளத்திலுள்ள. இப்பழக்கத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, "இரண்டு துண்டுத் துணிகள் எல்லாப் பெண்களாலும் பண்டை நாளில் பயன்படுத்தப்பட்டு வந்தன, ஆனால் இப் பழக்கம் எப்பொழுது மாறியது என்று தெளிவாகத் தெரியவில்லை. சமஸ்கிருத இலக்கியங்களில் இப் பழக்கத்தைப் பற்றி நான் பல தடவை படித்திருப்பதால்