பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89

களைக் கொண்ட நூல் என்று பொருள்படும்). அறப்பளீசுவர சதகத்திலுள்ள நூறு பாடல்களும் "அனுதினமும் மனதில் நினை தருசதுரகிரிவளர் அறப்பளீஸ்வர தேவனே“ என்ற அடிகொண்டு முடிகின்றமையால் கொல்லி மலைக்குச் 'சதுர கிரி' என்ற பெயரும் வழங்கியது போலும். 'தெண்ணீர்ப் பொன்னி திரைக் கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும் திருவரங்கப் பெருமானை'யும் இவர்கள் பக்தியோடு வணங்கு கின்றனர்.

மலையாளிகள் வாழும் சிற்றூர்களில் உள்ள பெருமாள் கோயில்களில் திருமால் வழிபாடு பல மாறுபாடுகளோடு சிதைந்து காணப்படுகிறது. அக் கோயில்களில் நடைபெறுவது உண்மையில் திருமால் வழிபாடுதானா என ஐயுற வேண்டியிருக்கிறது. திருமால் வழிபாட்டிற்கு இன்றியமையாத பலிபீடம் (shrine) சில கோயில்களில் காணப்படுவதில்லை, பொதுவாக இக் கோயில்களில் உயிர்ப் பலி நடைபெறுவதில்லை. இங்குப் பணிபுரியும் பூசாரி (மலையாளி)யும் புலால் உண்ணாதவனாகவே இருக்கிறான்.

நாமக்கல் கொல்லி மலையிலுள்ள குகை நாட்டில் இத்தகைய கோயில் ஒன்று உள்ளது. அக் கோயிலில் வீற்றிருக்கும் இறைவனைப் 'பேய்ப் பெருமாள்' என்று அழைக்கின்றனர். இங்கு சனிக்கிழமைகளிலேயே பூசை நடைபெறுகிறது.

கொல்லி மலையாளிகள் 'அரங்கட்டப்பன்' என்ற ஒரு கடவுளையும் வழிபடுகிறார்கள். 'அரங்க சிவன்' என்ற வேறு பெயரும் அக் கடவுளுக்கு உண்டு. மலையாளிகளின் குல முதல்வரான மூன்று சகோதரர்களும் வணங்கிய குல தெய்வமே அரங்கட்டப்பன் என்று எண்ணுகின்றனர். மேலும் கரிராமனின் வேற்றவ தாரமாகவும் இக் கடவுளைக் கருதுகின்றனர். குண்டூர் நாட்டிலும் அரங்கட்டப்பன் கோயில் உள்ளது. இக்