பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

கோயில்களில் பார்ப்பனக் குருக்களே பணிபுரிகின்றனர். இங்கு நடைபெறும் வழிபாடு மற்ற சிவன் கோயில் வழிபாட்டினின்றும் சிறிது மாறிக் காணப்படுகிறது. முதலில் தண்ணீரிலும் பிறகு பாலிலும், மூன்றாவதாக நல்லெண்ணெயிலும் இறைவனுக்கு அபிடேகம் நடைபெறுகிறது. பிறகு புத்தாடை அணிவித்து, இறைவனின் திருமேனியில் சந்தனத்தையும், குங்குமத்தையும் பூசுகின்றனர். பிறகு தூபம் காட்டப்படுகிறது. தீபங்களையும் கொளுத்தி வைக்கின்றனர், ஒரு வாழையிலையை இறைவன் திருமுன்னால் விரித்து, அதில் பொங்கலைப் படைக்கின்றனர். வழக்கமான மந்திரங்களைக் கூறி, சூடத்தைக் கொளுத்தி வணங்குகின்றனர். உயிர்ப் பலி இங்குக் கிடையாது. பொங்கல், பால், சர்க்கரை, பழம் முதலியனவும் சிவ வழிபாட்டிற்குரிய வேறு பொருள்களுமே இங்குப் படைக்கப்படுகின்றன, அரங்க சிவனுக்கு அடிமைப் பணிபுரியும் ஒரு சிறு தெய்வமும் மலையாளிகளால் வணங்கப்படுகிறது. அக்கடவுளுக்கு 'அரங்க சேவகன்' என்று பெயர். அரங்க சேவகன் கோயிலில் பணிபுரியும் பூசாரி பார்ப்பனரல்ல; மலையாளியே. அரங்க சேவகனுக்கு ஆடு, கோழிகள் முதலில் பலியிடப்பட்டனவாக அறியப்படுகிறது. இப்பொழுது அப் பழக்கம் இல்லை.

விநாயகர் வழிபாடு சமவெளியில் நடப்பதைப் போன்றே மலையாளிகளிடையிலும் நடைபெறுகிறது. செங்குத்தான ஒரு கல்லை நட்டு, மேலே கூரையில்லாமல் இக் கோயில்கள் அமைக்கப் பெறும். சில கோயில்கள் சுற்றுச் சுவர் இல்லாமலும் அமைக்கப் பெறும். இத்தகைய கோயில்கள் சேர்வராயன் மலையிலுள்ள மேலூரிலும், காகம்பாடியிலும் உள்ளன. விநாயகர் வழிபாட்டிற்கு ஏற்ற நாள் திங்கட்கிழமையே. முருகன் வழிபாடும் மலையாளிகளிடையே உண்டு. பிறகரை நாட்டிலுள்ள கந்தசாமி கோயில் புகழ் பெற்றதாகும். பங்குனி உத்தரத்தின்போது, இக் கடவுளுக்கு விழா