உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

14. வரதராசப் பெருமாளைப் பிரதிட்டை செய்த சாததுல்லாகான்*

இந்தியாவில் உள்ள ஏழு புனித தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுவதும், நகரங்களில் சிறந்ததாகக் கருதப்படுவதும் (நகரேஷு காஞ்சி) காஞ்சிபுரம். அன்னியர் படையெடுப்பைக் கண்டு அஞ்சிய பக்தர்களும் நிர்வாகிகளும் காஞ்சிபுரம் அருளாளப் பெருமான் ஆகிய வரதராசப் பெருமாள் திருமேனியை உடையார் பாளையம் எடுத்துக் கொண்டு சென்று அங்கு பாளையக்காரர் பாதுகாப்பில் வைத்தனர் (கி.பி. 1688)

படையெடுப்பு அச்சம் நீங்கிய நிலை ஏற்பட்டவுடன் மீண்டும் வரதராசப் பெருமாளை உடையார் பாளையத்திலிருந்து காஞ்சிக்குக் கொண்டு வந்து பிரதிட்டை செய்ய நிர்வாகிகள் விரும்பினர். வரதராசப் பெருமாள் திருமேனியழகில் பெரிதும் ஈடுபட்ட உடையார்பாளையம் பாளையக்காரர் மீண்டும் வரதராசப் பெருமாளைக் காஞ்சிபுரத்தார்களுக்குக் கொடுக்க மறுத்து விட்டார்.

காஞ்சிபுரம் ஸ்ரீமத் பரமஹம்ச பரிவ்ராஜகாச்சார்ய சீனிவாசதாச ஆத்தான் ஜீயர் சுவாமிகள், நவாப் சாததுல்லாகான் உதவியை வேண்டினார். நவாப் தன் தளபதி லாலா தோடர்மால் அவர்களைப் படையோடு அனுப்பி வரதராசப் பெருமாளை மீண்டும் காஞ்சி கொண்டு வந்து பிரதிட்டை செய்ய ஏற்பாடு செய்தார். சாலிவாகன சகம் 1632 (கி.பி.1710) விரோதிவருஷம் பால்குண அபரபட்சத் திரிதியையும் உத்திரட்டாதி நட்சத்திரமும் கூடிய சனிக்கிழமை பெருமாள் காஞ்சிபுரத்தில் பிரதிட்டை செய்யப்பட்டார். இன்றும் காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயிலில் ஒருநாள் 'உடையார் பாளையம் விழா' நடைபெறுகிறது.

இதைக் குறிக்கும் நீண்ட கல்வெட்டு காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயிலில் தாயார் சன்னதி வடபுறம் உள்ள கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. 19-ஆம்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அக்கல்வெட்டு மெக்கன்சி உதவியாளர்களால் படி எடுக்கப் பட்டது.

  • 1 ) South Indian Temple Inscpritions. Vol IIl; part II; No 1207; page 1216

-1219

2) Annual Report on Epigraphy, 639 of 1919

3) தமிழக அரசு சுவடி நூலகம் No 100 Page 161 II