உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

20. பார்ப்பனப் பெண்ணுக்காக உயிர்துறந்த பக்கிரிசாயபு *

ஒரு பார்ப்பனப் பெண்ணின் பொருட்டு உயிர்துறந்து வீர மரணம் அடைந்த ஒரு தீரமிக்க இஸ்லாமியர் பக்கிரிசாயபு அவர்களின் வரலாற்றை இச்செப்பேடு கூறுகிறது. இந்தச் செப்பேடு தஞ்சை நாயக்க மன்னர் விசயராகவ நாயக்கரால் கொடுக்கப் பட்டுள்ளது. (1640-1674)

தஞ்சாவூர் நாயக்கமன்னர் விசயரகுநாத நாயக்கர் வழங்கியது இச்செப்பேடாகும். ஆனந்த வருடம் கார்த்திகை மாதம் 13ஆம் நாள் என்று காணப்படுகிறது. கி.பி. 1674ஆம் ஆண்டாகும். இச்செப்பேட்டில் மிகவும் அரிய செய்தி ஒன்று கூறப்படுகிறது.

தஞ்சாவூரிலிருந்து வல்லத்திற்குச் செல்லும் காட்டு வழியில் பக்கிரிசாயபு என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். வல்லத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு பெண்ணைச் சிலர் வழிமறித்துக் கெடுக்க முயன்றனர். அதைக் கண்ட பக்கிரிசாயபு அப்பெண்ணைக் காப்பாற்றப் போராடினார். திருடர்கள் பக்கிரிசாயபுவைக் குத்திக் கொன்றனர்.

தன் மானத்தைக் காக்கும் பொருட்டு சாயபு உயிர் விட்டாரே என்று கலங்கிய அப்பார்ப்பனப் பெண் தன் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு அங்கேயே மரணமடைந்தாள்.

அப்போது திருடர்கட்குக் கண்பார்வை போய்விட்டது. திருடர்கள் இறைவனை நோக்கி "நாங்கள் அறியாமல் செய்து விட்டோம். தாங்கள் மன்னித்தால் பார்ப்பனப் பெண்ணுக்குக் கோயில் கட்டுகிறோம்" என்று வேண்டினர். கண்பார்வை கிடைத்தது. வேண்டிக் கொண்டவாறே அப்பெண்ணுக்கு நினைவுக் கோயில்கட்டிக் குளமும் வெட்டினர்.

இந்தக் கோயிலுக்கு விசயராகவ நாயக்கர் 1500 குழி நன்செய் நிலத்தைக் கொடையாக அளித்தார். இதைச் செப்பேடாகவும் வெட்டினார்.

தமிழ்நாட்டுச் செப்பேடுகள்: பகுதி 2; பக் 59: ச. கிருஷ்ணமூர்த்தி