உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

61

37. செந்தில் திருப்பணியில் சீதக்காதி’

திருச் சீரலைவாய் என்று சிறப்பிக்கப்பெறும் திருச்செந்தூர் முருகன் கோயில் பெரும் புகழ்பெற்றது. புறநானூறு, சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப்படை முதலிய இலக்கியங்களில் சிறப்பிக்கப் படுவது. முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் இரண்டாவது. அருணகிரிநாதர் இத்தலத்திற்கு 83 திருப்புகழ்ப் பாடல்கள் பாடியுள்ளார்.

இக்கோயிலில் மிகப் பெருமை மிக்கது. மேலைக் கோபுரம் ஆகும். அதனை முன்னின்று கட்டும் திருப்பணியை மேற்கொண்டவர் திருவாவடுதுறை ஆதீன ஒடுக்கத் தம்பிரான் தேசிக மூர்த்தி சுவாமிகள். அவர் கோயில் அருகில் உள்ள திருவாவடுதுறைக் கட்டளை மடத்தில் தங்கித் திருப்பணி வேலையை மேற்கொண்டு வந்தார்.

ஒன்பது நிலைகளையுடைய அக்கோபுரத் திருப்பணி ஆறு நிலைகள் கட்டியவுடன் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. திருப்பணி வேலை நின்றுவிட்டது. தேசிக மூர்த்தி சுவாமிகள் மிக வருந்தினார். முருகனை வேண்டினார்.

ஒருநாள் அவர் கனவில் முருகன் தோன்றி “வள்ளல் சீதக்காதி கீழக்கரையில் உள்ளார் அவரிடம் செல்க” என்று கூறினார்.

தேசிகர் கீழக்கரை சென்றார். சீதக்காதியைக் கண்டார். சீதக்காதி அவர் கருத்தறிந்து ஒரு மூட்டை உப்பைக் கொடுத்து கோயிலுக்குச் சென்று அவிழ்த்துப் பார்க்குமாறு கூறினார்.

அவ்வாறே கோயில் வந்த தீட்சிதர் உப்பு மூட்டையை அவிழ்த்துப் பார்த்தார். உள்ளே ஏராளமான தங்கக் காசுகள் இருந்தன. அவற்றைக் கொண்டு தேசிகர் கோபுர வேலையை இனிதே முடித்தார். இந்த அரிய செய்தி திருச்செந்தூர் தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

  • திருச்செந்தூர்க் கோயில் வரலாறு - தேவஸ்தான வெளியீடு.