உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

48 ஆபில் காபில் பள்ளி வாசலுக்கு சேதுபதி மன்னர் கொடை*

சேதுபதி மன்னர்களில் முத்துக்குமார விசயரகுநாத சேதுபதி காத்த தேவரவர்கள் இராமேசுவரம் ஆபில் காபில் பள்ளிவாசலுக்கு புதுக்குளம் என்ற ஊரைக் கொடையாகக் கொடுத்ததை இச்செப்பேடு கூறுகிறது. பள்ளிவாசல் சார்பாக கொடையைப் பெற்றவர்கள் நூறாலம்சா மகன் சுல்தான் சகாய்சரி பக்கீர் அவர்களாவர்.

சென்ற செப்பேடு போலவே இச்செப்பேட்டுக்கும் காப்புரை கூறப்பட்டுள்ளது. ஊர் வரிகளிலிருந்து வரும் அனைத்து வருவாயும் பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டது. இன்றும் இவ்வூர் ‘பக்கிரிகுளம்’ என்றே வழக்கிலும் அரசு ஆவணங்களிலும் எழுதப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி.1745.

ஆபில், காபில் என்பவர்கள் மனித இனத்தின் முதல் மனிதனாக திருக்குர்ஆனும், கிறித்தவர்களின் பைபிளும் போற்றுகின்ற ஆதம் அவர்களது மக்கள் ஆவர். இவர்களின் புனித அடக்கத்தலமாக இப்பள்ளிவாசல் கருதப்படுகிறது. இறைவனது கட்டளையை மீறிய ஆதம் அவர்களும் அவர்களது துணைவியார் ஏவாள் அவர்களும் சுவர்க்கத்திலிருந்து பூவுலகிற்கு அனுப்பப்பட்டனர்.

ஆதம் துணைவியார் ஏவாள் அரபு நாட்டிலும், ஆதம் இலங்கையின் மிக உயரமான மலையாகிய சுமனக்கூட மலை யிலும் இறங்கியதாக நம்பப்படுகிது. இம்மலையை போதிசத்து வரின் திருவடிகளைத் தாங்கிய இடமாக பௌத்தர்களு சிவபெருமான் பாதம் பட்டதால் சிவனடிபாதமலை என்று இந்துக்களும் நம்புகின்றனர்.

இராமேசுவரத்தையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் கடலில் 23 மைல் தொலைவில் மணல் திட்டுக்கள் உள்ளன. இவைகள் பெட்டி என்று அழைக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் இதன் வழியாக நடந்தே இலங்கை செல்ல முடிந்தது என்பர். “கடல் அடையாது இலங்கை கொண்டதாகக்” கூறுவது இவ்வழி சென்றதைத்தான். இதனை “ஆதம் பாலம்” என்று அழைக்கும் வழக்கம் உண்டு. எனவே இப்பள்ளிவாசல் ஆதம் மக்கள் அடக்கத்தலமாகக் கருதப்படுகிறது.