உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

49. இராமேசுவரம் கோயில் விசாரணையில் அலிப்புலி ராவுத்தர்

இராமேசுவரம் கோயில் இந்துக்களின் புனித யாத்திரைத் தலம். அங்குள்ள அர்ச்சகர்களில் இருபெரும் பிரிவு உண்டு. குருக்கள்மார் என்றும், நயினாக்கள் ஆரிய மகாசபையார் என்றும் இரு பிரிவினர் அழைக்கப் பெறுவர்.

தமிழ்நாட்டுப் பக்தர்களுக்குக் குருக்கள்மாரும், வடநாட்டுப் பக்தர்களுக்கு ஆரிய மகாசபையாரும் வழிபாடு நடத்துவர். இராமேசுவரம் கோயிலில் உள்ள பல தீர்த்தங்களில் இலட்சுமண தீர்த்தம் என்பது மகா முக்கியமானது. மக்கள் பெருந்திரளாக அங்கு கூடுவதால் வருவாய் மிகுதி.

இலட்சுமண தீர்த்தத்தின் உரிமை பற்றி இருபிரிவு அர்ச்சகர் கட்கும் தகராறு ஏற்பட்டது. சேதுபதி அரசரிடம் புகார் சென்றது. அப்போது சேதுநாட்டை ஆட்சிபுரிந்த மன்னர் முத்துக்குமார விசயரகுநாத சேதுபதி தன் அதிகாரிகள் நால்வரை விசாரிக்க ஆணையிட்டார்.

1. தளகர்த்தர் ரா. வெள்ளையன் சேர்வைக்காரர்

2. ரா. பிரதானி ஆண்டியப்பப் பிள்ளை

3. பெரிய கட்டளை இராமநாத பண்டாரம்

4. சத்திர மணியக்காரர்

ஆகியோர் 18.1.1746 அன்று அவ்வழக்கை விசாரிக்க வந்தனர். அந்த நீதிவிசாரணையில் நடுவராகப் பணியாற்றியவர்களில் ஒருவர் 'இராமேசுவரம் அலிப்புலி ராவுத்தர்’ ஆவார்.

  • தமிழ்நாட்டு செப்பேடுகள், தொகுதி 2, பக்கம் 86.87, ச. கிருஷ்ணமூர்த்தி சேதுபதி செப்பேடுகள். புலவர் செ.இராசு. தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு (1994)