120
கொடுஞ்செயல்களைச் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. பெண் களில் பலர் இசக்கியைத் தங்களின் அருந்துணைத் தெய்வமாகக் கருதி வேண்டிக் கொள்வதைப் பார்க்கலாம்.
மணல்
பத்திரகாளியம்மன் கோயில்கள் பெரும்பாலாக நிறைந்த கடற்கரைப் பகுதியில் வரிசையாக இருப்பதைக் காண முடிகிறது. அந்த இடங்கள் முன்பு பாலை நிலம் போன்று மரங்களின்றி இருந்தவைகளாக கூறுகின்றனர். மாத்திரமன்றி சில பத்திரகாளியம்மன் கோயில்களைச் சுற்றிக் காரை, கள்ளி, எசலை முதலிய முட்செடிகளே நிறைந்துள்ளன. இத்தெய்வம் பாலைக் கடவுளாகிய கொற்றவையை நினைவுபடுத்துவதாகவே உள்ளது. கோயில்கள் ஈசன் தெங்கு, ஈத்தாமொழி, பள்ளம், உசரவிளை, மணக்குடி, ஒவரி ஆகிய இடங்களில் இருக்கின்றன. சிங்க வாகனத்தில் பத்திரகாளி தெருவலம் வர வாணவேடிக்கை களுடன் விழா சிறப்புற பல கோயில்களில் நடக்கிறது. பெண்களே தெய்வமேறி ஆடுகின்றனர். ஆண்கள் ஆடுவது அரிது. திரிசூலம் ஏந்தி ஆடுவர்.
மாரியம்மன் ஆட்டம் ஊருக்கு ஊர் நடக்கிறது. பங்குனி கார்த்திகை ஆகிய இருமாதங்களிலும் விழா நடக்கும்போது ஆடுவர். மாரியம்மன் ஆடுவோர் கொதித்து வழியும் மஞ்சள் தண்ணீரில் குளிப்பர். கும்பத்தைத் தலையிலெடுத்து ஆடுவர். ஒரு பிரம்பு, திரிசூலம் ஆகியவை ஆயுதங்கள். சிலர் சிவப்புத் துணியை அரையில் கட்டியிருப்பர். ஊர் சுற்றி வருவர். வேப்பங் குழையால் வீசுவர். மக்கள் அவர்களுடைய கால்களில் மஞ்சள் பூசி நிறைகுடம் தண்ணீரை ஊற்றுவர். மழைக் குறி கூறுவதும் உண்டு. தெய்வம் குளித்து மிஞ்சிய மஞ்சள் நீரைப் புனிதமாகக் கருதிய மக்கள் அதைக் குழந்தைகளின் தலையில் தெளிப்பர்.
கொட்டாரம் ஊரில் ஜெகதீஸ்வர அம்மன் கோயில் உள்ளது. அந்தத் தெய்வமேறி ஆடுபவர் கால்களைப் பின்னி வைத்துக் கொண்டு தொத்தித் தொத்தி ஆடுவதைக் காணலாம். அந்தத் தெய்வத்துக்குக் கால்கள் பின்னப்பட்டிருப்பதாகக் கதை கூறும். அவ்வாறு சாமியாடி ஆடுவது வியப்பாக இருக்கும். பயிற்சி ஏதுமின்றி கதை நிகழ்ச்சியைக் கொண்டு இவ்வாறு நடித்து ஆடுவதைக் கண்டு மக்கள் இறையாற்றலை வியந்து பாராட்டுவர்.