பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தனார்

125

பாண்டியர் என்ற மூவினம் தமிழ்நாட்டை ஆட்சி புரிந்திருந்த அதே காலத்தில், அவர்களிள் ஆட்சி எல்லைக்கு உள்ளாகவே, அதியர், ஆவியர், ஒவியர், கொங்கர், கோசர். மலையர், மழவர், திரையர், தொண்டையர், விச்சியர், வேளிர் போலும் வேறு இனத்தவரும் சிறுசிறு அரசமைத்து ஆண்டு வந்தனர்.

முடியாட்சி:

முடியாட்சியே,சங்ககால அரசியல் முறையாம். தந்தைக்குப்பின் மகன் என்ற வழிவழி அரச உரிமையே அன்று இருந்தது. முன்னோர்களைக் கூற்றுவன்கொண்டு. சென்றானாக,முறைப்படி வந்த பழைய அரச உரிமை'முத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப், பால்தர வந்த பழவிறல் தாயம்’-என்ற புறநானூற்று அடிகளைக் காண்க. இம்முறைக்கு ஒரோவழி இடையூறு நிகழ்வதும் 'உண்டு. உருவப் பல்தேர் இளஞ்சேட் சென்னி என்பான். இறந்தானாக, அவன் மகன் கரிகாற் பெருவளத்தான் அரசு கட்டில் ஏறுவதே முறையாகவும், அவன் மிகவும் இளையனாக இருந்தமையால், அவனுடைய தாயத்தார் அவனைச் சிறையில் அடைத்துவிட்டுத் தாமே அரியணையில் அமர்ந்து விட்டனர்.பின்னர்,கரிகாலன் சிறையினின்றும் வெளிப்பட்டு,அவரை வென்று அழித்துவிட்டுப் பின்னரே தனக்குரிய அரசைப் பெற்றான். உடன்பிறந்தார் இருவர், அரச உரிமைக்காகத் தமக்குள்ளே போராடி நிற்பதும் நிகழ்ந்துளது. நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்ற சோழ அரசர்களின் போர் நிகழ்ச்சிகளைப் புறநானூறு கூறுவது காண்க.

நல்லாட்சி:

குழந்தைக்கும் தந்தைக்கும் இடையேயுள்ள பிணைப்பு போன்ற அன்புப் பிணைப்பு, அக்கால மக்களுக்கும் மன்னனுக்கும் இடையே நிலவியது. நாட்டு மக்கள், தம் உயிர்.