பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்.

ஓம்பும் நெல்லையும், நீரையும் உயிராக மதியாமல், மன்னனையே தம் உயிராக மதித்தனர்; அது போலவே,மன்னனும்,மக்களுக்குத்தானே உயிர் என மதித்து அரசோச்சி வந்தான். தன் நாட்டையும்,மக்களையும், தன்குட்டியை பிறர் அணுகவும் அஞ்சுமாறு காக்கும் புலிபோல்,பகை அச்சம் நீக்கிக் காத்து வந்தான். பாரம் ஏற்றிய வண்டி பெருமணலுள் 'சிக்கிக்கொண்டபோதும் தளராது, தன் உடல் உரமெலாம் ஒருங்குகொண்டு ஈர்த்து இடம் சேர்க்கும் எருதுபோல்,ஆட்சிக்கு இடையூறு நேர்ந்தபோதும் கலங்காது, தன் ஆற்றலால்,அது போக்கி நல்லாட்சி நடத்தி வந்தான்.

பிறப்பால் ஆகும் உயர்வு தாழ்வினும்,பெற்ற கல்வியால் ஆகும் உயர்வு தாழ்வே உரம் உடையது எனக் கல்விச் சிறப்பை உணர்ந்து, அக்கல்வியை, ஆசிரியன் உவப்பன எல்லாம் செய்து தான் கற்றதோடு, மக்களையும் கற்குமாறு அறிவுரை கூறி வந்தான்.

உணவே மக்களுக்கு உயிர் என்பதை உணர்ந்து, அவ்வுணவு பெருக, நிலவளமும், நீர்வளமும் கண்டான்;காடுகளை அழித்துக் கழனிகளாக்கினான். விதைத்துவிட்டு,விதைத்த விதை முளைக்க உதவும் நீருக்கு மழை வேண்டி நிற்கும் நிலையுள்ள விளைநிலம் பரந்து கிடப்பினும் பயனில்லை; ஆகவே நீர் வளத்தைப் பெருக்க வேண்டும்; அந்நீர் வளம் பெருகச் செய்தவரே தம் பெயர் விளங்கச் செய்தவராவர் என்பதை உணர்ந்து ஆங்காங்கே குளம் தொட்டு வளம் பெருக்கினான்.

கற்றறிந்த புலவர் பெருமக்கள் தன்னையும், தன் நாட்டையும், பாராட்டிப் பாடுவது தனக்குப் பெருமையாகவும், அவர்கள் அவ்வாறு பாடாது 'கழிவது தனக்குச் சிறுமையாகவும் கருதினான்,அதனால் அப்புலவர்கள், உவக்கு மளவு பொன்னையும் பொருளையும் வாரி வழங்கினான்;