பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11.சங்ககாலப் போர் முறை

சங்க காலத்து ஆடவரும் மகளிரும் இயல்பாகவே மறப்பண்பு உடையவராக, விளங்கினர்.சங்கு,சக்கரம்,தண்டு,வாள்,வில் ஆகிய ஐந்து படைக்கலங்கள் பொறித்த அணியையே,தங்கள் பிள்ளைகளின் கழுத்தில் அணிவித்தனர்.தானே கொன்ற புலியின் பற்களை அணியாக்கி அணிவதில் பெருமிதம் கொண்டனர்.விழாக்காலங்களில், தமக்குக் களிப்பூட்டும் காட்சிகளாகக் கோழிச் சண்டை, ஆட்டுக்கடாச் சண்டை, மாட்டுக்கடாச் சண்டைகளையே கொண்டனர்; விற்போரிலும், வாட்போரிலும் தம் இளைஞர் வல்லராதற்குத் துணைபுரியும் பயிற்சிக் கூடங்கள் ஊர் தோறும் காட்சி அளித்தன.

வீர மறவர்

போர் என்ற உடனே ஆடவர் தோள் பூரிக்கும்; நடுவூர் மன்றத்தே கிடக்கும் போர் முரசு, காற்றால் அலைப்புண்ட மரக்கிளை மோதி ஓசை எழுப்பினும், அதுபோர் அழைப்பு என எண்ணித் துள்ளும் அவர் உள்ளம். போரில் புறங்காட்டி ஓடாது நின்று போர் புரிந்து மாண்டு போகும் மக்களைக் காணின், அக்காலத்தாயர் மகிழ்வர்: மகன் போரில் தோற்றுப் புறங்காட்டி ஓடி விட்டான். எனக் கேட்பின், அவனுக்குப் பால் ஊட்டிய தன் மார்பை அறுத்தெரியவும் துணிவர். மக்களைப் பெற்று வளர்த்தல் தன் கடனெனின்: போரில் எதிர்ப்பட்ட மத யானைகளையும் வெட்டி வீழ்த்தி வெற்றி பெறல் மக்கள் கடனாகும் என மதித்த்னர். முன்னைப் போர்களில் முறையே தமையனையும், தன்