பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

 கணவனையும் இழந்துவிட்ட ஒருத்தி,மறுநாளும் போர்ப்பறை கேட்டு,தன் குடிவிளங்க ஒரே மகனை,அதுவும் ஆடும் பருவத்தனாகிய மகனை அழைத்து,குளிப்பாட்டி,நல்ல ஆடை அணிவித்து, அவன் தலையை வாரி முடித்து,வேலைக் கையில் கொடுத்துப் போர்க்களம் போகவிட்டாள்.

"போர்ப்படு காயமே புகழின் காயம்”, “போர்ப் புண்,புண் அன்று;அது புகழின் கண்”, “போர்ப் புண் பெறாது கழிந்த நாள், தம் வாழ்நாளில் பயன் ஏதும் இன்றிக் கழிந்த வீண் நாள்" என்று உணர்வுடையவராதலின், இறந்து பிறக்கும் குழந்தைகளையும் வாளால் வெட்டி,வாள் வடு உண்டாக்கியே புதைப்பர்.

மண்ணாசை

"ஆசைக்கோர் அளவில்லை, அகிலமெல்லாம் கட்டி ஆளினும், கடல் மீதினும் ஆணை செலவே நிற்பர்” என்றவாறு, அளவுக்கு மீறிய மண்ணாசையே, போருக்கான தலையாய காரணம். இந்நாடு அனைவர்க்கும் பொது என்ற சொல்லை அக்கால அரசர் காது பொறுக்காது: ஆளும் நாட்டெல்லை சிறிது என்ற உணர்வு அவர் உள்ளத்தை உறுத்திக் கொண்டே இருக்கும். அரசுரிமை காரணமாகவும் போர்கள் நிகழ்ந்தன: உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி இறந்த போது,முறைப்படி அவன் மகன் கரிகாற் பெருவளத்தானே அரசுரிமை பெறவேண்டிய வனாகவும், அவன் நனி மிக இளையனாகவே, சிலர் அவனைச் சிறையில் அடைத்துவிட்டுத் தாமே ஆளத் தொடங்கியதும், கரிகாற் பெருவளத்தான் சிறையினின்றும் வெளியேறிப் போர்புரிந்து, தாயத்தாரை வென்று அரியணை ஏறியதும், அரசுரிமை நிலை நாட்ட மேற்கொண்ட போர்களாம்.