பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா.கோவிந்தனார்

133

முற்றியிருப்பதைக் கைவிட்டு, காவற் காட்டை அழித்தும், அகழியைத் தூர்த்தும், புற மதிலையும், அக மதிலையும் அழித்தும், அரணுக்குள் புகுந்து போரிட்டு வெற்றி பெறுவதும் உண்டு; அதே போல், அகத்தே அடங்கி இருப்பவன், தன் படை ஆற்றல் பெருகிவிட்டது என்ற நிலை பெற்றவுடனே அடங்கி இருப்பதைக் கைவிட்டு அரணுக்கு வெளியே வந்து முற்றியிருப்பானை அழித்து வெற்றி கொள்வதும் உண்டு.

வாகை

வெற்றி பெற்ற வேந்தர்கள், பகை நாட்டுக் காவல் மரத்தை வெட்டி, அம்மரத் துண்டங்களை, அந்நாட்டு மகளிரைக் கொண்டு ஈர்த்துச் சென்று, போர் முரசு செய்து கொள்வது, தோற்ற மன்னரின் மணிமுடியை அழித்து வீரக் கழலாகச் செய்து தன் காலில் அணிந்து கொள்வது, தன் அரசியல் சின்னங்களைத் தோற்ற அரசனின் கோட்டை மதில் வாயில் கதவுகளில் பொறிப்பதும், பகை நாட்டில் கொள்ளையடித்த பொருள்களைப் படையாளர்களுக்கும் புலவர்களுக்கும் பகிர்ந்து அளிப்பது போலும் அழிசெயல்கள் போரை அடுத்து நிகழும்.

ஆனிரை கவரவும், கவர்ந்த ஆனிரைகளை மீட்கவும் நிகழும் போர்கள், நாட்டு எல்லைப் பகுதிகளிலும்,மண்ணாசை கொண்டு மாற்றான் நாட்டைத் தன் நாடாக்க மேற் கொண்ட போரும், அம்மண்ணாசை கொண்டு வந்தானை வென்று தன் நாட்டை இழக்காமல் காக்க மேற் கொண்ட போரும், அகநாடுகளிலும், அரண் அழிக்கவும். அரண் காக்கவும் நிகழும் போர்கள், நாட்டின் தலைநகர்களிலும், மண்,பொன்,மகள் காரணமாக அல்லாமல், தன் படைச் செருக்கைக் கடல் கடந்த நாட்டவரும் உணர்ந்து பாராட்ட வேண்டும் என்ற காரணமாக நிகழும் போர்கள், கடலை அடுத்த நிலங்களிலும் நிகழும்


த-9