பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

புகை அகிய பல்வேறு புகைகளின் ஊடே புகுந்து. நாறும் இம்மணம் எம் மணம் என எவரும் நுகர்ந்து உணராதவாறு, பல்வேறு மணங்களும் ஒருங்கே மணக்க மதுரைத் தென்றல் வந்து வீசுவதை நீ உணரவில்லையோ? மதுரை அணுகி விட்டது"1 என பாணர் கூறியதும், மதுரை நோக்கிச் செல்லும் கவுந்தி, கோவலன், கண்ணகி, ஆகிய மூவர்களையும், அரண்மனையிலும், ஆலயங்களிலும் எழும் முரசொலியும், அந்தணர் ஓதும் நான்மறை ஒலியும், மாதவர் ஒதும் மந்திர ஒலியும், போரில் வெற்றி பெற்ற வீரர்களைப் பாராட்டும் வெற்றி விழா ஒலியும், போர்க்களிறுகளின் பிளிற்றொலியும், குதிரைகளின் கனைப்பெர்லியும், பாடித்திரியும் பொருநர்களின் பறையொலியும், போலும் பல்வேறு ஒலிகள், கடல் ஒலிபோல் கலந்து ஒலித்து எதிர்கொண்டன எனக் கூறப்படுவதும், தமிழ்நாட்டு பேரூர்களின் பெருமையினைப் பறை சாற்றிப் புகழ்வது காண்க.

பேராற்றங்கரைப் பேரூர்கள்.

பேரூர்கள், பெரும்பாலும், பேராறுகளின் பாய்ச்சலால் வளம்பெறும் பள்ளத்தாக்குகளில், அப்பேராறுகளின்' கரைகளிலேயே தோன்றும் என்பது உலகெங்கும் கண்ட உண்மையாகும். ஆறுகள், நில வளத்துக்கு, நிலைத்த துணைபுரிதலோடு, நகரங்களுக்கு, நல்ல அரணாகவும் அமையும் என்பதை அறிந்தமையால், மக்கள், பேரூர் களைப் பேராற்றங்கரைகளிலேயே அமைத்தார்கள். பழமையால் பெருமையுற்ற எகிப்து நாட்டு நாகரீக நகரங்கள் நைல்நதியின் கரையிலும், மெசபடோமிய நகரங்கள் டைகிரஸ், யூப்ரட்ஸ் ஆறுகளின் கரைகளிலும். மொகஞ்சதரோ, அரப்பாவில் கண்ட திராவிட நாகரீக நகரங்கள் சிந்து நதிக்கரையிலும் இடம் பெற்றிருந்தமை உணர்க.