பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

புறநகர், புறநகரைக் கடந்தால் மதில், மதிலைக் கடந்தால் அகநகர் என்ற இதுவே பழந்தமிழ்ப் பேரூர்களின் அமைப்பு முறையாகும். இது, கவுந்தியும், கோவலனும், கண்ணகியும், வையையாற்றைத் தெப்பத்தில் கடந்து, தென்கரை அடைந்து, காவற்காடு சூழ்ந்த அகழியைக் கடந்து, புறநகர் புகுந்து தங்கினார்கள் எனக்கூறும் சிலப்பதிகாரச் சான்றால் உறுதியாவது உணர்க.

காவற் காடு

மரம் செடி கொடிகள் மண்டி, ஒனறோடொன்று பின்னிக் கிடப்பதால், காடு, மக்களும் மாவும் எளிதில் கடந்து செல்லாவாறு இடையூறு பயக்கும். அதனால் அரசர்களின் நாற்படை அதை ஊடறுத்துக் கொண்டு போவது அறவே இயலாது. அதனால், அரசர்கள், காட்டை ஓர் இயற்கை அரணாகக் கொண்டனர். ஆனால், காட்டை அழித்தே நாடு அமைக்க வேண்டிய சூழ்நிலையில், நாடு வளர வளர்க் காடுகள் அழிவுற்றன. இயற்கை அரணாக அமைந்திருந்த காடுகள் அழிந்து போகவே, பேரூர்களைச் சூழச் செயற்கைக் காடுகளை வளர்த்தார்கள். அதனால், ஒரு நாட்டின் மீதோ, அல்லது ஒரு பேரூரின் மீதோ படை யெடுத்துச் செல்லும் பகைவர், முதற்கண் அக்காவற்காடுகளை அரும்பாடுபட்டு அழிக்கவேண்டியதாயிற்று. காவற். காடு, மிளை, இளை என்ற பெயர்களாலும் அழைக்கப் பெறும்.

அகழி

காவற்காட்டை அழித்து விடுவது எளிது. ஆனால் கடல்போல் காட்சி தரும் அகழியைக் கடப்பது அரிது; அதனால், அரண்களுள் நீர் அரண் நனி மிகச் சிறப்புடையது. நீர் அரண், வற்றாப்,பேராறுகளாலும், கடலானும் ஆகும். ஆற்றுநீர் பாய்வதால். நன்செயும், புன்செயும்