பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

நீரும் மணம் நாறும்; அவ்வகழி வாழ் மீன், முதலை இனங்களும் தம் புலால் நாற்றம் ஒழித்து நறுமணம் நாறும்; செந்தாமரை, செங்கழுநீர் போலும் பகற்பூக்களும், ஆம்பல் போலும் இராப் பூக்களும் மலர்ந்து மணக்கும் அகழி, வானவில் வனப்பைக் காட்டும் என மணிமேகலை கூறுவது காண்க.

புறநகர்:

அகழியைக் கடந்தால் அடைவது புறநகர். பகைவர் படை, காவற்காட்டை அழிப்பதையும், அகழியைத் தூர்ப்பதையும், அந்நகரைச் சூழ வாழும் அந்நாட்டு மக்களை அலைப்பதையும் தடுத்து நிறுத்துவது, அரணகத்துப் படையால் ஆகாது ஆதலின், அரண்மதிலையும், அகழியையும், காவற்காட்டையும் காக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட புறப்படையின் பாசறைக் கூடம், இப்புறநகரிலேயே இடம் பெற்றிருந்தது. காவற்படையின் பாசறை இடமாக விளங் கும் இப்புறநகர், போரில் கைப்பற்றிய பகையரசர்களையும், தம் நாட்டுக்கு வரும் வேற்று நாட்டு. வேந்தர்களையும் வைத்துப் பேணும் வேளாவிக்கோ மாளிகை போலும் மாளிகைகளுக்கும் இடம் அளித்தது.

நகரின் கழுநீர் பாய்ந்து வளம் பெற்ற அப்புறநகர், நெல் விளையும் நன்செய்களையும், மணம் நாறும் மலர்ச் சோலைகளையும், பறவைகளின் ஒலி அடங்காப் பொய்கை, ஏரி முதலாம் பெரிய நீர் நிலைகளையும், வாழை, தென்னை, கமுகு முதலாம் வளத்தோட்டங்களையும், வேழக்கோல் வேய்ந்த தண்ண்ர்ப்பந்தல்களையும் கொண்டு இயற்கை எழில் காட்டித் திகழ்ந்தது. நாகரீக வளம் மிக்க நகர வாழ்வின் ஆரவாரத்தை வெறுக்கும் ஆன்றோர்களும், அறவோர்களும், அறிவுடைப் பெரியோர்களும், அமைதியின் இருப்பிடமாய் அப்புற நகரையே தம் வாழிடமாக வரைந்து கொண்டனர். அப்புறநகர் வாழும் உரிமை