பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தனார்

143

அத்தகையோர்க்கல்லது வேறு எவர்க்கும் இல்லை. அதனால், அவர்கள் இருந்து அறிவாராய்ச்சி பண்ணுவதற்கு வாய்ப்பளிக்கும் பள்ளிகளும் பொது மேடைகளும் அப்புற நகரில் இடம் பெற்றிருந்தன.

ஆன்றோர்கள் இருந்து அறிவாராய்ச்சி பண்ணுவதற் கேற்ற இடங்களோடு, அன்னார் வழிபாடு ஆற்றுதற்குரிய ஆலயங்களும் அப்புற நகரில் எழுப்பப்பட்டன: அறவோர் களும், ஆன்றோர்களும் வழிபாடாற்ற எழுந்த அவ்வாலயங்களில் உறையும் தெய்வங்களை அகநகர் மக்களும் சென்று வழி பட்டனர்.

மதில்

காவற்காட்டு மரங்களை வெட்டி அழித்தும், அகழியைத் தூர்த்தும், புணைகளைத் துணை கொண்டு கடந்தும், கிடங்கையும், காவற்காட்டையும் காத்து நின்ற புற நகர்ப் படையை வெற்றி கொண்டும் பாய்ந்துவரும் பகைவர் படையால் பாழுறா வண்ணம் நாட்டை நின்று காப்பது மதில் ஒன்றே. அதனால், அம்மதில் பகைவர் படையால் எளிதில் பாழுற்றுப் போய் விடாமல், நெடிது நின்று தாங்கவல்ல வன்மையுடையாதல் வேண்டும் என்பதில் பழந்தமிழ் வேந்தர்கள் விழிப்பாயிருந்தார்கள். அம் மதில்கள் ஏணியிட்டு ஏறமாட்டா உயர்வும், அகழ்ந்து கடக்கலாகா அடி அகலமும் எவற்றாலும் அழிக்கலாகாத், திண்மையும் உடையதாதல் வேண்டும். அரணகத்தே அடங்கியிருக்கும் படைவீரர் ஆங்கிருந்தவாறே போரிட்டுப் பகைவர் படையைப் பாழ்பண்ண வாய்ப்பளிக்கும் வகையில் அம்மதில் தலையகலம் உடையதாத்தலும் வேண்டும், என்ற மதிலமைப்பு முறைக்ளைப் பழந்தமிழர் பண்டே அறிந்திருந்தனர். "உயர்வு அகலம்,திண்மை, அருமை, இந்நான்கின் அமைவு அரண் என்று உரைக்கும் நூல்"