பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

என அரணுக்கு வள்ளுவர் வகுத்த இலக்கணம் காண்க. மேலும், அரணைக் காப்பது, படைவீரரால் இயலாது போகும் நிலையிலும், அரண் காக்கப் படுத்ல் வேண்டும் ஆதலின், அந்நிலையில், அது மதில் ஒன்றினாலேயே ஆகும் என்பதறிந்து, அம்மதில் அகத்தே அரிய பொறிப்புடைகள் பலவற்றைப் பொறுத்தி வைத்தார்கள். தானே வளைந்து அம்பு ஏவும் வில், குரங்கு வடிவாய் இருந்து, சேர்ந்தாரைப் பற்றிக் கடிக்கும் பொறி: கல் உமிழும் கவண்; சிவக்கக் காய்ந்து, சேர்ந்தார்கள் மீது சிதறித் துன்புறுத்தும் நெய் உலை; செம்பை உருக்கிப் பகைவர் படைமீது பாய்ச்சும் செம்புருக்கு உலை; மதிலைப் பற்ற அணுகும் பகைவர் மீது ஊற்ற, இரும்பை உருகக் காய்ச்சி வைத்திருக்கும் இரும்பு உலை; கவணிற்கு வேண்டும் கற்களைக் கொண்டிருக்கும் கூடைப்பொறி; தூண்டில் போலும் தோற்றம் உடையதாகி, மதிலை அடைவாரைப் பற்றி வலிக்கும் தூண்டிற் பொறி; மதில் உச்சியை அடைந்து விட்ட பகை வரைக் கழுத்தில் மாட்டி, இறுக்கி உயிர் போக்கும் தொடக்கு ஆண்டலைப் பறவை வடிவாய் இருந்து, பகை வீரர்களைக் கண்ணுற்றதும் பறந்து பாய்ந்து அவர் தலைகளைக் கொத்தி மூளையைப் பறிக்கும் பொறி, மதில் மீது ஏறினாரை மறித்துத் தள்ளும் இரும்புக் கவைக் கோல்; கழுமரம், அம்புக் கட்டு: அம்பிருக்கும் அறைகள்: குறியவும், சிறியவுமான அம்புகளை விரைந்து எய்யும் சிறு சிறு பொறிகள்: மதிலைப் பற்றும் கைகளைக் குத்தித் துன்புறுத்தும் உள்சிப் பொறி; மீன் கொத்திப் பறவை அருவுடையதாகி, விரைந்து பாய்ந்து பகைவீரர் கண்களைக் கொத்திப் பறிக்குப் சிச்சிலிப் பொறி, பகைவீரர்கள் மீது பாய்ந்து அவர் உடல்களைத் தம் கோடுகளால் குத்திக் கிழிக்கும் பன்றி உருவப் பொறிகள்; பகை வீரர் தலைகளைத் தாக்கி உயிர் போக்கும் தடிப் பொறி, கோல், குந்தம், வேல், இவை, அரண் மதில்களில் தமிழ் அரசர்கள் அமைத்து வைத்திருந்த அரிய பொறிப் படைகளாகும்.