பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

கேளாது, போரிடுவதே உங்கள் விருப்பமாயின், போரில் நீங்கள் தோற்பது உறுதி; தோற்றால், உங்கள் காலில் வீரக் கழலைக் களைந்து விட்டுச் சிலம்பைப் பூட்டுவோம்; மார்பில் போர்க் கவசத்தை மாற்றிவிட்டு தழையாடை சுற்றுவோம். கைகளில் வாளையும், வேலையும் அகற்றி விட்டு, மகளிரோடு. ஆடி மகிழுங்கள் எனப் பந்தும், பாவையும் திணித்து உங்களை மகளிராக்கி மானம் இழக்கப் பண்ணுவோம்' என அறிவித்து அரண் வாழ் மக்களின் ஆண்மைக்கு எடுத்துக் காட்டாய்த் திகழும்.

தமிழ் நாட்டுப் பேரூர்கள், எண்காவத நீள இடையள வுடைய பேரூர்கள் ஆதலின், அப்பேரூர் வாழ்மக்கள் அனைவரும் ஒரே வாயிலில் புகுவதும், கழிவதும் இயலாது ஆதலின், நாற்புறங்களிலும் வாயில் அமைத்திருந்தார்கள். ஆனால், அவ்வாயில்கள் நான்கும், உயர்வு அகலங்களால் ஒரு தன்மைய அல்ல. நாட்டின் நாற்படைகளும், வணிகப் பொதியேற்றிய வண்டிகளும் வந்து புகும் வாயில் ஒன்று மட்டுமே பெருவாயிலாம்; ஏனைய மூன்றும், மக்கள் மட்டுமே வழங்கு வதற்கேற்ற சிறு வாயில்களாம். அவை, வாயில் என வழங்கப்பட நூழை என அழைக்கப்படும். நோக்கரும் குறும்பின் நூழையும் வாயிலும்’ என்ற தொடர் காண்க.

வாணிகம் கருதியும், வேறு காரணம் கருதியும் மக்கள் இரவு பகல் எப்போதும் வந்து செல்வராதலின் அடையா நெடு வாயில்களாக விளங்கும் பேரூர் வாயில்கள், போர்க் காலத்தில். பகைவர் படை உட் புகுந்துவிடாதவாறு அடைக்கப்படும். அவ்வாறு அவ்வாயில்களை அடைக்க உதவும். கதவுகள் பகைவர் யானைப்படை மோதினும் அழிவுறாத் திண்மையுடையவாக ஆக்கப்பெற்றன. பலகைகள் ஒன்றோடொன்று நன்கு இணையவும், தாள்கள் தனியே செய்து பொறுத்தப் பெறாமல், கதவுகள் ஆக்கப்படும் போதே உடன் கடைந்து அமைக்கப்பெறும். கதவு,