பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தனார்.

149

பட்ட வளையல்கள், தந்தத்தைக் கடைந்து செய்யப்பட்ட விந்தைப் பொருள்கள், புகை வகைகள், சாந்து வகைகள்,போன்றவை நாளங்காடியில் கிடைக்கும் வாணிகப் பொருள்களாம்.

ஊர்தி, உடை, போலும் மக்கள் தேவைகளும், கணை, கவசம் போலும் மன்னர் தேவைகளும் நாளங்காடியின் வாணிகப் பொருள்களாம் என்றால், உணவிற்கு வேண்டும் காய், கனி, கிழங்கு வகைகள் அல்லங்காடியின் வாணிகப் பொருள்களாம். மா, பலா முதலிய கனி வகைகளும், வாழை, வழுதுணம் முதலிய காய் வகைகளும், கீரை வகை களும், இறைச்சி கல்ந்து ஆக்கிய அரிசிச்சோறும், அவித் தெடுத்த வள்ளிக்கிழங்கும் அல்லங்காடியில் விற்பனையாகும் , வாணிகப் பொருள்களாம். அல்லங்காடியில் வாணிகம் இரவுக் காலத்தில் நிகழுமாதலின், ஆங்குக் கடைதொறும் விளக்குகள் ஏற்றப்பெறும். அவ்விளக்குகள் அளிக்கும் பேரொளியால், இரவு பகலாகிக் காட்டும். நுண் மணலில் வீழ்ந்து கிடக்கும் வெண்சிறு கடுகையும் விளக்கமாகக் காட்டவல்ல பேரொளி அல்லங்காடி எங்கும் வீசிக் கொண்டிருக்கும்.

அகநகர்

அரசரும், அமைச்சர் முதலாம் அவன் ஆட்சிக்குழுவினரும், நாற்படைத் தலைவரும், மறையோரும், உழவரும், வணிகரும் வாழும் மாடமாளிகைகளும்; மன்றமும், மலர்ச் சோலையும், பொதியிலும், பொய்கையும், செய்குன்றும் ஒருங்கே கொண்ட சிறந்த இடம் அகநகர். நாளங்காடிக்கு அணித்தாக வாணிக நிலையங்கள் இடம்பெற்றன. அறுவை, வாணிகர் வீதி, பொன்வாணிகர் வீதி, நவமணி வணிகர் வீதி முதலாயினவே அப்பெரு வாணிக நிலையங்களாம். வணிகர் வீதிகளைக் கடந்தால், நான்மறையாளர் விதி;


த-10