பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

என்ற பாட்டைப் பாடிவிட்டு, எதிரில் இருவர் வர, ஆணை மட்டும் பார்த்துப் பெண்ணைப் பார்க்காத அக்கால இளைஞரின் நாகரீகம் எங்கே அழகிய இளமகளிரை எங்கெல்லாம் காணலாம் என அலைபாயும் உள்ளத்தோடு, மகளிர் கல்லூரி வாயில்களிலும், திரையரங்குத் திடல்களிலும் காத்துக் கிடக்கும் இன்றைய இளைஞரின் நாகரீகம் எங்கே எனக் கேட்டு முடித்தேன்.

அடுத்து 'தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை' என்ற-திருவாசகத் தொடரை எடுத்துக் கொண்டு, தருதல் என்றால், கொடுப்பவன் தாழ்ந்து, வாங்குவோன் உயர்ந்து நிற்கும்போது ஆள வேண்டிய சொல், இங்கு திந்த உன் தன்னை என கூறியதன் மூலம், சிவனைத் தாழ்ந்தவனாகவும், தன்னை உயர்ந்தவனாகவும். மதித்துள்ளாரே மணிவாசகர், இது ஏன் என்ற கேள்வியைக் கேட்டுவிட்டுப் பேச்சை முடித்துக் கொண்டேன்.

தலைமையுரையில், ஞானியார் அவர்கள் கோவிந்தன் பேசிய நேரம் சிறிய நேரம் என்றாலும், என் சிந்தனைக்கு மட்டுமல்லாமல் அனைவர் சிந்தனைக்கும் அரிய வேலை கொடுத்து விட்டான் எனக் கூறிப் பாராட்டினார்.

மற்றுமொரு நிகழ்ச்சி: நான் வித்துவான் பட்டம் பெறாத நேரம். ஆசிரியர்பால் பின்னர் தமிழ் கற்க வந்த கோமான் ம. வீ இராகவன் அவர்கள், அந்த ஆண்டு வித்துவான் தேர்வு எழுதியிருந்தார். அந்நிலையில் திருவத்திபுரத்திற்கு வருகை தந்த, எங்கள் ஆசிரியரின் ஆசிரியர் கரந்தைக் கவியரசு ஆர். வெங்கடாசலம்பிள்ளை அவர்கள், இராகவன் தேர்வில் நன்றாக் எழுதியுள்ளார் எனக் கூறினார். அது கேட்ட ஒளவை அவர்கள் என்னைச் சுட்டிக் காட்டி, "இவன் அவனைவிடத் தெளிவாகப் படித்தவன்” என்று கூறிச் சென்றுவிட்டார்.

கவியரசு அவர்கள் என்னை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டு, இலக்கியத்திலும், இலக்கணத்திலு