பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா.கோவிந்தனார்

167

பி.ஒ.எல். தேர்வில் முதல்பகுதி பி.எஸ். வகுப்பிற்குரிய ஆங்கில இலக்கியம். இரண்டாம் பகுதி தமிழ் வித்துவான் தேர்வு, மூன்றாம் பகுதி திராவிட மொழி ஒப்பிலக்கணமும் தென்னிந்திய வரலாறும் (ஆங்கிலத்தில்) இரண்டாம் பகுதியை முன்னரே முடித்து விட்டேன். முதல் பகுதியையும் முடித்து விட்டேன். மூன்றாம் பகுதியில் தென்னிந்திய வரலாற்றுக்குரிய நூல்களாகிய திரு நீலகண்ட சாஸ்திரியாரின் சோழர் வரலாறு, பாண்டியர் வரலாறு, திரு.கோபாலன் அவர்களின் பல்லவ வரலாறு, திரு.பி.டி. சீனிவாச அய்யங்கார் அவர்களிள் தமிழர் வரலாறு ஆகிய ஆங்கில நூல்களை வாங்கிக் கொண்டேன்.கால்டுவெல் ஒப்பிலக்கணத்தை இலண்டனில் உள்ள தம் நண்பர் மூலம் வாங்கித் தந்தார் ஆசிரியர்.

அவற்றைப் படிக்கும் போது கால்டுவெல் ஒப்பிலக் கணத்தையும், பி.டி எஸ். அவர்களின் தமிழர் வரலாற்றையும் தமிழில் மொழி பெயர்த்தால் பி.ஓ. எல் படிக்கும் மாணவர்களுக்குப் பயன்படும் என எண்ணினேன்,

வேலூரில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தலைவர், 'தாமரைச் செல்வர், அமரர் சுப்பையா பிள்ளை அவர்கள், சென்னையில், பேராசிரியர் தெ.பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் தலைமையில், 22-2-42-இல் நடைபெறும் நற்றிணை மாநாட்டில் பாலை என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றுமாறும், ஆற்றும் சொற்பொழிவை அப்படியே எழுதித் தருமாறும் வேண்டினார். நானும் அது செய்தேன்.

அம்மாநாட்டினைத் தொடர்ந்து திரு சுப்பையா அவர்களின் நட்பு தொடர்ந்தது. இலக்கியம் தொடர்பான நூல்களை எழுதித் தருமாறு அன்புக் கட்டளை இட்டார். "திருமாவளவன்" என்று முதல் நூல் 1951-ல் வெளி வந்தது (என் முதல் மகனின் பெயரும் திருமாவளவன் என்பது குறிப்பிடல் நலம்.) அதைத் தொடர்ந்து சங்க காலப் புலவர் என்ற வரிசையில் 16 நூல்களையும், அரசர்' என்ற வரிசையில் ஆறு நூல்களையும் வெளியிட்டார். புலவர் வரிசையில் முதல் நூல் 1952லும்; அரசர் வரிசையில் கடைசி நூல் :1955லும் வெளிவந்தன.