பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர். கா.கோவிந்தனார்

19

திருவாளர், அய்யங்கார் கூறிய, மேலே காட்டிய காரணங்களை அகச்சான்றுகளாகக் கொண்ட பேராசிரியர் இராமச்சந்திரன் அவர்கள், அடுத்து அவற்றுள் ஏற்பன, ஏலாதனவற்றைக் கூறியுள்ளார்.

1.கரிகாலனின் இமயப்படையெடுப்பு, எட்டுத் தொகை நூல்களில் இடம் பெறாதது, திருமாவளவனையும், கரிகாலனையும் ஒருவராகக் கொள்ளும் முடிவுக்கு எதிரான போதுமான சான்றாக அமையாது.அவன் இமயப்படையெடுப்பு, எட்டுத் தொகை நூலாசிரியர்கள், தங்கள் பாக்களைப் பாடியபின்னர் நிகழ்ந்திருக்கக்கூடும்.

2.அதே போல் வெண்ணி, வாகைப் போர்கள் குறிப்பிடப்படாமை, திருமாவளவனையும், கரிகாலனையும் ஒருவராகக் கொள்ளும் முடிவைப் பலவீனப்படுத்தாது. பட்டினப்பாலை ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார், கரிகாலன் தன்நாட்டகத்தே ஒருசில அரசர்களோடும், குறுநிலத் தலைவர்களோடும் பெற்ற வெற்றிகளைக் காட்டிலும், அவன் வேறு இடத்தில் பெற்ற வெற்றிகளால் ஈர்க்கப்பட்டிருக்கலாம்.

3.கரிகாலன் செய்த வேத வேள்விகள்,பட்டினப்பாலை ஆசிரியர் காலத்தில், அத்துணைச் சிறப்புடையதாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆகவே, அவர், தம் பாட்டில் அவற்றைப்பற்றி குறிப்பிடாமல் விட்டிருக்கக்கூடும்.

இவ்வாறு கூறியதன் மூலம், பேராசிரியர் இராமச்சந்திரன் அவர்கள், திரு. அய்யங்கார் கூறிய காரணங்கள் ஆறினுள், நான்கினை (1,3,4,5) பொருள் அற்றனவாக்கி - விட்டார். ஆராய எஞ்சி நிற்பன, 2 மற்றும் 6 ஆகிய இரண்டு மட்டுமே.